

உத்தரப் பிரதேசத்தில் சாலையில் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த முதியவர் ஒருவரை, காவல்துறை அதிகாரி ஒருவர் துரிதமாக செயல்பட்டு, முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் பரவி பாராட்டுகளை பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ரஹீம்நகர் காவல் நிலையத்தில் சந்தீப் யாதவ் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் சரிந்து மயங்கி விழுவதை பார்த்தார்.
இதையடுத்து காவலர் சந்தீப் துரிதமாக செயல்பட்டு, முதியவருக்கு இதய நுரையீரல் புத்துயிரூட்டல் (CPR) சிக்கிச்சை அளித்தார்.
இதைத்தொடர்ந்து சரியான நேரத்தில் முதியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் வசதியும் காவலர் ஏற்பாடு செய்தார்.
காவலர் சந்தீப் முதியவருக்கு இதய முதலுதவி செய்து உயிரை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடம் பாராட்டுகளை பெற்றது.
இதையடுத்து காவலரை பாராட்டும் வகையில் பாராட்டு சான்றிதழ் ஒன்றை வழங்கி லக்னோ காவல்துறை ஆணையர் தருண் கபா கெளரவித்தார்.
மேலும் இந்த செய்தியை பகிர்ந்த லக்னோ காவல்துறை, சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையும், முறையான பயிற்சியும் ஒருவரின் உயிரை காப்பாற்ற எப்படி உதவும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.