புதிய வாக்காளர் சேர்ப்பு: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு திருத்த பணி நடக்கிறது

எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
election commission of India
Published on: 

நாடு முழுக்க சுமார் 13 கோடி வாக்காளரகளின் பெயர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் நீக்கிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பான விவகாரம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், கோவா உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு திருத்த பணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் விளக்கம்:

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், உயிரிழந்தோர், இடம்பெயர்ந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தவர்களின் பெயர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

எனினும், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு:

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணிகள் முடிந்த தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி, கோவா, சத்தீஸ்கர், அசாம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீகார், மேற்கு வங்கம், அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் என 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு திருத்த பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த திருத்தப் பணிகளை 2027 ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருத்த பணி முடிந்ததும் வரைவு வாக்காளர் பட்டியலை வரும் நவம்பர் 12-ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இறுதி வாக்காளர் பட்டியல் 2027, ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com