

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா மாவட்டத்தில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஜுப்பல் மற்றும் ரோஹ்ரு பகுதிகளில் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் இரவு சுமார் 9.50 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. மாநில தலைநகரில் இருந்து சுமார் 90-110 கி.மீ. தொலைவில் உள்ள ஜுப்பல் மற்றும் ரோஹ்ரு ஆகிய பகுதிகளில் சில வினாடிகள் நீடித்த நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்க மையம் சிம்லா மாவட்டத்தில் 31.118 பாகை வட அட்சரேகை மற்றும் 78.00 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்தது.
சிம்லா மாவட்டத்திலோ அல்லது அதை ஒட்டிய பகுதிகளிலோ சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசம், அதிக பாதிப்புக்குள்ளாகும் நில அதிர்வு மண்டலங்களான IV மற்றும் V-இல் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, இந்திய தர நிர்ணயக் கழகம், மாநிலம் முழுவதையும் அதிக அபாயமுள்ள மண்டலம் VI-இன் கீழ் வகைப்படுத்தி ஒரு புதிய நில அதிர்வு வரைபடத்தை முன்மொழிந்தது.
இருப்பினும், மத்திய அரசு பின்னர் அந்த முன்மொழியப்பட்ட வகைப்பாட்டை திரும்ப பெற்றுக்கொண்டு, தற்போதுள்ள நில அதிர்வு மண்டல தரநிலைகளையே தக்கவைத்து கொண்டது.