மாணவியின் பெயர் ‘கழுதை’; கழுதை தம்பதிக்கு பிறந்தவர்- நர்சிங் சான்றிதழை பார்த்து அரசு அதிர்ச்சி

மருத்துவ பதிவுமுறையில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஓட்டைகளும், அலட்சியமும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
கழுதைக்கு வழங்கப்பட்ட நர்சிங் சான்றிதழ்
Published on: 
Summary

மத்திய பிரதேச செவிலியர் பதிவு கவுன்சிலின் ஆன்லைன் போர்ட்டலில் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிக்கொணர தேசிய மாணவர் அமைப்பின் மாநில துணைத் தலைவர் ரவி பர்மர் விசித்திர சோதனை செய்தார். விண்ணப்பதாரர் பெயரை ‘கழுதை’, பெற்றோர் பெயரை ‘கழுதை தந்தை’, ‘கழுதை தாய்’ எனவும், சாதியை ‘விலங்கு’ எனவும், முகவரியை ‘கிடைக்கும் இடமெல்லாம்’ எனவும் பதிவு செய்து, கழுதை புகைப்படம், வெற்று கல்விச் சான்றிதழ்கள் மட்டும் பதிவேற்றினார். ஆவண சரிபார்ப்பு இல்லாமல் சிஸ்டம் ‘Donkey MPNRC’ என்ற பெயரில் டிஜிட்டல் செவிலியர் பதிவு சான்றிதழை உருவாக்கியது. இதனால் மருத்துவ பதிவுமுறையில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகள், அலட்சியம் வெளிச்சத்துக்கு வந்து, ஆன்லைன் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விசாரணை தொடங்கியது.

ஆன்-லைன் போர்ட்டல்களை எவ்வளவு பாதுகாப்பாக உருவாக்கினாலும் அதையும் மீறி உள் நுழைந்து போலிகளை உருவாக்க முடியும் என்று உருவாக்கி காட்டுபவர்கள் இன்றைய இளைய தலைமுறையினர்.

சோதனை முயற்சி

அப்படித்தான் மத்திய பிரதேசத்தில் செவிலியர் பதிவு கவுன்சிலின் ஆன்லைன் முறையில் இருக்கும் குளறுபடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர தேசிய மாணவர் அமைப்பின் மாநில துணைத் தலைவர் ரவிபர்மர் களத்தில் இறங்கி ஒரு விசித்திரமான சோதனை முயற்சியை மேற்கொண்டார்.

அதற்காக அந்த ஆன்லைன் போர்ட்டலை திறந்து விண்ணப்பித்தார். அப்போது அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போலியான விசித்திரமான பதில்களை பதிவிட்டார். அதாவது விண்ணப்பத்தாரர் பெயர் கழுதை. தந்தையின் பெயர்-கழுதை தந்தை, தாயின் பெயர்-கழுதை தாய், சாதி-விலங்கு, முகவரி- கிடைக்கும் இடமெல்லாம் என்று பதிவேற்றி இருக்கிறார். புகைப்படத்தை பதிவேற்ற சொன்ன இடத்தில் ஒரு கழுதையின் போட்டோவை பதிவேற்றம் செய்து இருக்கிறார்.

பதிவு சான்றிதழ்

இதனுடன் உண்மையான கல்விச் சான்றிதழ்களுக்கு பதிலாக வெற்றுத்தாள்களை மட்டுமே பதிவேற்றி இருக்கிறார். பின்னர் அதற்கான கட்டணத்தையும் செலுத்தி இருக்கிறார். போதிய ஆவண சரிபார்ப்பு இல்லாமலேயே அந்த ஆன்லைன சிஸ்டம் அதை ஏற்றுக் கொண்டு அடுத்த சில நிமிடங் களில் ‘Donkey MPNRC’ என்ற பெயரில் டிஜிட்டல் செவிலியர் பதிவு சான்றிதழை உருவாக்கி கொடுத்துள்ளது.

இது அந்த மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவ பதிவுமுறையில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஓட்டைகளும், அலட்சியமும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலிகமாக ஆன்லைன் பதிவுகள் நிறுத்தப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.

கிராமங்களில் ‘கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? என்றால் கள்ளன்தான் பெரிது என்பார்கள். நிஜத்திலும் அப்படித்தான் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com