ஜாஜர் ரெயில்வே தண்டவாளம் அருகே பறவை ஆர்வலரின் கண்டுபிடிப்பு!

ஹரியானாவில் முதன்முறையாக ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவை பதிவு.
Jhajjar Bird
Published on
Summary

ஹரியானா ஜாஜர் ரெயில் தண்டவாளம் அருகே ராகேஷ் அஹ்லாவத் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவையை கண்டறிந்தார். இது சைபீரியாவிலிருந்து வழிதவறி வந்த இளம் பறவை என்று கண்டறியப்பட்டது.

ஹரியானா மாநிலம் ஜாஜர் மாவட்டத்தின் டிகல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே, பறவை ஆர்வலரான ராகேஷ் அஹ்லாவத் என்பவர் தனது வழக்கமான பறவை கண்காணிப்பு பயணத்தின் போது ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் இந்த அரிய பறவையைக் கண்டறிந்துள்ளார்.

அங்குள்ள ஒரு புதரின் மீது அமர்ந்திருந்த இந்த பறவையின் தனித்துவமான தோற்றம் அவரை உடனடியாகக் கவர்ந்தது.

வித்தியாசமான பறவை

இதுகுறித்து ராகேஷ் அஹ்லாவத் கூறுகையில், "பொதுவாக நமது பகுதியில் நாம் காணும் ஸ்ட்ரைக் பறவைகள் நீண்ட வாலையும், பழுப்பு நிற முதுகையும் கொண்டிருக்கும்.

ஆனால், ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதன் மேல் பகுதி பழுப்பு நிறத்திலும், கீழ் பகுதி வெளிறிய நிறத்திலும், உடல் முழுவதும் செதில் போன்ற கருமையான அமைப்புகளையும் கொண்டிருந்தது." என்றார்.

மேலும், இந்தப் பறவை தனது வாலை அடிக்கடி விரித்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் அசைத்த விசித்திரமான நடத்தையும் அவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து வந்த குட்டி வேட்டைக்காரன்

இந்த ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவைகள் மத்திய ரஷ்யா மற்றும் சைபீரியா போன்ற குளிர்ந்த பகுதிகளில் இருந்து இலையுதிர்காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்குப் புலம்பெயர்கின்றன.

இந்தியாவில் இவை வழக்கமாக குஜராத்தின் கட்ச் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.

பறவையின் சிறப்பம்சங்கள்

இவை சிறிய அளவிலான வேட்டைப் பறவைகளாகும். முட்கள் நிறைந்த புதர்கள் மற்றும் திறந்தவெளிப் பிரதேசங்களில் அமர்ந்து கொண்டு பெரிய பூச்சிகள், சிறிய பறவைகள் மற்றும் எலிகளை வேட்டையாடும்.

வேட்டைப் பறவையாக இருந்தாலும், இவை புதர்களில் மிக அமைதியாக அமர்ந்திருக்கக் கூடியவை. இதனால் எளிதில் மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படாது.

ஜாஜரில் காணப்பட்ட இந்த பறவை இன்னும் முழு வளர்ச்சியடையாத இளம் பறவையாகும். இது தனது வழக்கமான பயணப் பாதையிலிருந்து வழிதவறி ஹரியானாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஹரியானாவின் முதல் அதிகாரப்பூர்வ பதிவு

டெல்லி பறவைகள் சங்கத்தின் மூத்த பறவை ஆய்வாளரான பங்கஜ் குப்தா இதுகுறித்து தெரிவிக்கையில், "ஹரியானாவில் ரெட்-பாக்டு ஸ்ட்ரைக் பறவை ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இது பறவையியல் துறையில் ஒரு மிக முக்கியமான பதிவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரெயில்வே தண்டவாளத்தின் ஓரங்களில் உள்ள முள் புதர்கள் மற்றும் திறந்தவெளிகள் இந்த பறவைகள் வேட்டையாடுவதற்கு ஏற்ற சூழலை வழங்கியதால், இது தற்காலிகமாக இங்கு தங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com