ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு ரூ.1.28 கோடி 'டிஜிட்டல் கைது' மோசடி: புனேவில் அதிர்ச்சி சம்பவம்!

சந்தேக நபர்கள் வாட்ஸ்அப் எண்ணிற்குப் போலி எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் சில ஆபாச படங்களை அனுப்பியுள்ளனர்.
Digital Arrest
Published on
Summary

அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், 'டிஜிட்டல் கைது' எனப்படும் அதிநவீன ஆன்லைன் சைபர் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.1.28 கோடியை இழந்துள்ளார்.

போலி அழைப்பு

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, தொலைத்தொடர்பு தலைமையகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண் ஒருவர் ராணுவ அதிகாரியை தொடர்பு கொண்டார். அதிகாரியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து மும்பையில் சட்டவிரோத அழைப்புகளும், ஆபாச வீடியோக்களும் அனுப்பப்படுவதாக அச்ச மூட்டினார். பின்னர், இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறி, போலி காவல் அதிகாரியிடம் இணைப்பை வழங்கினார்.

சந்தேக நபர்கள் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் போலி எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் சில ஆபாச படங்களை அனுப்பி பயமுறுத்தினர். மேலும், விசாரணை என்ற பெயரில் அவரது குடும்ப பின்னணி, வங்கி கணக்குகள், நிலையான வைப்புத் தொகைகள் மற்றும் தங்கம் கையிருப்பு குறித்து விரிவான விவரங்களை சேகரித்தனர். மூத்த குடிமகன் என்பதால் நேரில் கைது செய்யாமல் 'டிஜிட்டல் கைது' முறையில் கண்காணிப்பில் வைப்பதாக கூறி மிரட்டினர்.

போலி சி.பி.ஐ அதிகாரிகள்

அடுத்தடுத்த வீடியோ அழைப்புகளில், காவல் சீருடையில் தோன்றிய மோசடி கும்பல், சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து அதிகாரியை மேலும் அச்சுறுத்தியது. கணக்கு சரிபார்ப்பு என்ற பெயரில், அவரது நிலையான வைப்புத் தொகைகளை உடைத்து, அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு பணிக்கப்பட்டார். சட்ட நடவடிக்கைக்கும் கைதுக்கும் பயந்த அதிகாரி, ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை பல தவணைகளில் மொத்தம் ரூ.1.28 கோடியை போலி கணக்குகளுக்கு மாற்றினார்.

உண்மையை அம்பலப்படுத்திய மகள்

அடிக்கடி வெவ்வேறு கணக்குகளுக்கு பணம் அனுப்ப கோரியதால் ராணுவ அதிகாரியின் மனைவியாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது மகளுக்குத் தகவல் தெரிவித்தார். நிலைமையை உணர்ந்த மகள், பெற்றோரிடம் இது மோசடி என்பதை சுட்டிக்காட்டி உடனடியாகப் பணப்பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

காவல்துறையில் புகார்

பாதிக்கப்பட்ட அதிகாரி உடனடியாக புனே சைபர் குற்றப்பிரிவு காவல்துறையையும் உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பணம் அனுப்பப்பட்ட போலி கணக்குகளை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையோ அல்லது பிற அரசு அமைப்புகளோ ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் 'டிஜிட்டல் கைது' செய்ய மாட்டார்கள் என்றும், பணமாற்றம் கேட்க மாட்டார்கள் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com