

தனது இயக்கத்திற்கு ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் தொடர்பு இருந்ததாக சோனியா காந்தி சுமத்திய குற்றச்சாட்டை அண்ணா ஹசாரே மறுத்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகமான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' அண்மையில் வெளியானது.
அதில் அவர் அன்னா ஹசாரே இயக்கத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தது நாடறிந்ததே.
இந்நிலையில், 2011ல் அன்னா ஹசாரே தலைமையேற்ற 'இந்தியா அகென்ஸ்ட் கரப்ஷன்' (ஊழலுக்கு எதிராக இந்தியா) இயக்கத்திற்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளிடமிருந்து திரைமறைவு ஆதரவு கிடைத்ததாக, அந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சில முக்கிய பிரமுகர்கள் பின்னர் கூறியதாக சோனியா காந்தி தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த இயக்கத்தால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் காங்கிரஸுக்கும் சிக்கல் எழுந்ததாக சோனியா குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கவிழ்ப்பதே எதிரிகளின் நோக்கமாக இருந்ததாகவும், அது நிறைவேற்றப்பட்ட பிறகு அன்னா ஹசாரே பற்றி யாரும் பேசவில்லை என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்நிலையில் சோனியா காந்தி புத்தகத்தில் சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்னா ஹசாரே பதிலளித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அஹில்யநகரில் நேற்று (புதன்கிழமையன்று) பேசிய அன்னா ஹசாரே, தனக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தனது இயக்கத்தின் காரணமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜகவை சேர்ந்த பலரும் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளை விட, சமுதாயம் மற்றும் நாட்டின் நலன்களே தனக்கு முக்கியம் என்று அவர் கூறினார்.
வறட்சியின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது ஓய்வூதியப் பணத்தைச் செலவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கனி தரும் மரத்தின் மீது மட்டுமே கற்கள் எறியப்படுகின்றன என்று குறிப்பிட்ட ஹசாரே, தனது வாழ்நாளை சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் அர்ப்பணித்துள்ளதாக கூறினார்.
விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தனது பொறுப்பைத் தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
விரைவில் வெளியாகவுள்ள 'அன்னா ஹசாரே: கிராம யோகி' என்ற புத்தகத்தில் தனது வாழ்க்கை விவரங்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.