

பாலிவுட் நடிகை தியா மிர்சா நீட் மருத்துவ தேர்வு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வந்த நிலையில், அவர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் நடித்துள்ள தீபாவளி பிரசார வீடியோவை மும்பை மாநகராட்சி நீக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு மத்தியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தீபாவளியை கொண்டாடுமாறு பம்பாய் உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து மாசற்ற முறையில் தீபாவளியை கொண்டாடுமாறு, ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை பிரான்மும்பை மாநகராட்சி தொடங்கியது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் நடிகை தியா மிர்சா, நடிகை மாதுரி தீட்சித் மற்றும் கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இதற்கிடையில் நடிகை தியா மிர்சா, நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து நடிகை தியா மிர்சா எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்றும்,
எங்கள் பாரம்பரியங்கள் எங்கள் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதாக எக்ஸ் தளத்தில் மும்பை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கை குறிப்பிட்டு மும்பை பாஜக தலைவர் அமீத் சதம் பதிவிட்டார்.
இதைத்தொடர்ந்து நடிகை மிர்சா நடித்த தீபாவளி விழிப்புணர்வு பிரசாரத்தை மும்பை மாநகராட்சி அதிரடியாக நீக்கியது.
இதையடுத்து இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை மேயர் ரிது தாவ்டே, “தியா மிர்சா எப்போதுமே பிளவுபடுத்தும் சக்திகளுக்கே ஆதரவளித்து வருகிறார். அவர் எப்போதும் இந்துக்களுக்கு எதிரானவர்” என கூறினார்.
பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே கூறுகையில், "தியா மிர்சா தீபாவளி குறித்து ட்வீட் செய்திருந்தார், ஆனால் அவர் ஈத், முஹர்ரம் அல்லது பக்ரி ஈத் போன்ற பண்டிகைகளின் போது இதுபோன்ற ஆலோசனைகளை ட்வீட் செய்வதோ அல்லது வழங்குவதோ இல்லை.
அவரைப் போன்றவர்கள் சனாதன இந்து மதத்திற்கு எதிரானவர்கள். நான் இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஃபட்னாவிஸுடன் விவாதித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்துவேன்," என்று கூறினார்.
சிவசேனா செய்தித் தொடர்பாளர் ஷைனா என்.சி கூறுகையில், “ஒளி என்றே பொருள்படும் பெயரைக் கொண்ட தியா மிர்சா, ஒளித் திருவிழா என்பது தீபாவளியைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மாசுபாட்டை கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், பட்டாசுகளை வெடிப்ப தைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அனைவரும் அறிவார்கள்" என்றார்.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கூறுகையில், "தியா மிர்சா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர், ஆனால் இது எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் விஷயமும் அல்ல.
இந்தியாவில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டம், ஒவ்வொரு மதத்திற்கும் அதன் பண்டிகைகளை கொண்டாடும் உரிமையை வழங்குகிறது.
முஸ்லிம்கள் ஈத் பண்டிகையைக் கொண்டாடி ரமலான் மாதத்தை அனுசரிப்பதை போலவே, இந்து சமூகத்தினரும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர்.
பட்டாசுகள் வெடிக்கப்படாவிட்டால், தீபாவளி அதன் முக்கியத்துவத்தில் சிலவற்றை இழக்கக்கூடும். இருப்பினும், அதிகப்படியான மாசுபாடு குறித்தும் நாம் கவலைப்பட வேண்டும்" என கூறினார்.