டெல்லி: இளைஞரை அறைந்த விவகாரத்தில் அமைச்சர் பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை எடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்!

பிரதமர் ரீல்ஸ் மூலம் Gen-Z உடன் நெருங்குகிறார், ஆனால் உங்கள் அமைச்சர் இளைஞர்களை அடிக்கிறார் - கெஜ்ரிவால்
Parvesh Verma
Published on: 
Summary

டெல்லியில் சாலை தரக்குறைவாக அமைக்கப்பட்டதை வீடியோ எடுத்த இளைஞரை, அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா பொதுவெளியில் அறைந்த சம்பவம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் அமைச்சர் மீது பிணையில் வெளிவர முடியாத தன்மையற்ற குற்றப் பதிவை செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

டெல்லியின் திலக் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மிகவும் தரக்குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. "சாலையை வெறும் கைகளால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு மோசமாக இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது" என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த முறைகேடு குறித்து சாஹிப் சிங் என்ற இளைஞர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆத்திரத்தில் அவரை அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீஸ் நடவடிக்கை

பாதிக்கப்பட்ட இளைஞர் சாஹிப் சிங் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 115-ன் கீழ் (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) அமைச்சர் பர்வேஷ் வர்மா மீது டெல்லி போலீசார் நான்-காக்னிசபிள் ரிப்போர்ட் பதிவு செய்துள்ளனர். இத்தகைய வழக்குகளில் நீதிமன்ற உத்தரவு அல்லது வாரண்ட் இல்லாமல் போலீசாரால் யாரையும் கைது செய்யவோ, விசாரிக்கவோ முடியாது.

அதே நேரத்தில், அந்தச் சாலைப் பணியை மேற்கொண்ட பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னிடம் பணம் பறிக்க முயன்றதாக அளித்த புகாரின் பேரில் திலக் நகர் காவல் நிலைய போலீசார் FIR பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆய்வு & கோரிக்கை

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் திலக் நகர் பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட சாலையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி வரலாற்றிலேயே இவ்வளவு மோசமான ஒரு சாலை அமைக்கப்பட்டதே இல்லை.

இந்த ஊழலை வீடியோ எடுத்ததற்காக இளைஞரை அமைச்சர் அறைந்துள்ளார். டெல்லியில் கடந்த 10 ஆண்டுகள் நாங்கள் ஆட்சி நடத்தினோம், ஆனால் ஒருபோதும் இதுபோன்ற தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டதில்லை.

இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. எனவே, பிரதமர் மோடி இந்த அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கம் செய்து, உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

b

கெஜ்ரிவால் - வீடியோ பதிவு

மேலும், எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால், "மறுபுறம் பிரதமர் நள்ளிரவில் எழுந்து ரீல்ஸ் செய்து கொண்டு, Gen-Z தலைமுறையினருடன் நெருக்கத்தை ஏற்படுத்துவேன் என்கிறார்.

ஆனால் உங்கள் அமைச்சரோ அந்தத் தலைமுறை இளைஞர்களை அடிக்கிறார். இதனால் தான் இளைஞர்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து கோபமாக இருக்கிறார்கள்" என்று சாடினார்.

இச்சம்பவம் குறித்து மேலும் பல புகார்கள் வந்துள்ளதாகவும், விசாரணைக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com