

பிரசித்தி பெற்ற சத் பூஜை திருநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வருகிற 16-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தின் லெப்டினன்ட் கவர்னரின் ஒப்புதலுடன் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதிஹார் ஷஷ்டி அல்லது சூர்ய ஷஷ்டி எனப்படும் சத் பூஜை திருநாளைக் முன்னிட்டு, நவம்பர் 16-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத் பூஜை என்பது வெறும் ஆன்மீகக் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது டெல்லியின் சமூக மற்றும் கலாச்சார ஒற்றுமையின் பிரகாசமான அடையாளம் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். இந்த நான்கு நாள் திருநாளைக் கொண்டாட விரும்புவோர் எவரும் எவ்வித தடையுமின்றி முழுமையான நம்பிக்கையுடனும் அமைதியுடனும் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 13-ஆம் தேதி தொடங்க உள்ள இந்த நான்கு நாள் பெருவிழாவையொட்டி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய படித்துறைகளில் பெண்களுக்கான உடைகளை மாற்றும் அறைகள், சிசிடிவி கேமராக்கள், போதுமான வெளிச்ச வசதிகள், பந்தல்கள் மற்றும் சத் பூஜைக்காக முனக் கால்வாய் அருகே பதினொரு கிலோமீட்டர் நீளமுள்ள பிரத்யேக படித்துறை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாகச் செய்யப்பட்டு வருகின்றன.