

தேசியப் பணப்பரிமாற்றக் கழகத்தின் கீழ் இயங்கும் யூபிஐ மற்றும் சேவைகள் வழிகாட்டல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குறிப்பிட்ட நுகர்வோர்-வணிகர் பரிவர்த்தனைகளுக்கான இந்த கட்டண விதிமுறை தற்காலிகமாகப் பின்வாங்கப்பட்டுள்ளது.
ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகள் மீது அக்டோபர் 15 முதல் அமல்படுத்தப்படவிருந்த 0.4 சதவீத வணிகத் தள்ளுபடி விகித கட்டண முறையை தேசியப் பணப்பரிமாற்றக் கழகம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. பண்டிகை கால சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அமலாக்கத் தேதி தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பணப்பரிமாற்றக் கழகத்தின் கீழ் இயங்கும் யூபிஐ மற்றும் சேவைகள் வழிகாட்டல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குறிப்பிட்ட நுகர்வோர்-வணிகர் பரிவர்த்தனைகளுக்கான இந்த கட்டண விதிமுறை தற்காலிகமாகப் பின்வாங்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நம்பியிருக்கும் இந்த முக்கியமான பண்டிகை மற்றும் திருமணச் சீசனில், கூடுதல் கட்டணச் சுமை வர்த்தகத்தைப் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்த எம்டிஆர் கட்டணம் நுகர்வோரிடம் நேரடியாக வசூலிக்கப்படாமல், வணிகர்களால் மட்டுமே செலுத்தப்படவிருந்தது. ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வசூலிக்கப்படும் கட்டணம் டிஜிட்டல் பணப்பரிமாற்றக் கட்டமைப்பில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்தது.
இதில் வாடிக்கையாளர்களின் வங்கிகளுக்கு 40 சதவீதமும், பணப் பரிமாற்ற நுழைவாயில்களுக்கு 30 சதவீதமும், யூபிஐ செயலிகளுக்கு 20 சதவீதமும், அந்தச் செயலியின் அனுசரணை வங்கிக்கு மீதமுள்ள 10 சதவீதமும் வழங்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளும், வழக்கமான அன்றாடச் சிறு வணிகப் பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமின்றி இலவசமாகவே தொடரும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரூ.2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட யூபிஐ பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிக்கப்படுவது நுகர்வோர் மீது கூடுதல் வரிச் சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தலைமையிலான சுமார் 20 வர்த்தகத் தலைவர்கள் குழு கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாகச் சந்தித்து முறையிட்டது.
இந்தத் கட்டண முறையால் வணிகர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் லாப விளிம்பு பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தற்போது வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று NPCI இந்த ஒத்திவைப்பை அறிவித்துள்ளதை வர்த்தகச் சங்கங்கள் வரவேற்றுள்ளன. தீபாவளிக்குப் பிறகு இது குறித்த புதிய தேதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.