

நீ 'அங்கிள்' என்று அழைத்த அந்த நபர் இனி ஒருபோதும் சுதந்திரமாக நடமாட முடியாது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு கூண்டுக்குள் வாழ்வார்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அபூர்வமான நெகிழ்ச்சி சம்பவம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, 7 வயதாக இருந்த சிறுமி ஒருவருக்கு, அவள் நம்பிக்கையோடு பழகிய சொந்த மாமாவே பாலியல் வன்கொடுமை இழைத்துள்ளார்.
இந்த போக்சோ வழக்கில், சிறுமி தைரியமாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணையின் போது சிறுமி நீதிபதியிடம், "என்னை சீரழித்த அந்த மாமாவை, நான் வளர்ந்து பெரியவள் ஆகும் வரை சிறையிலிருந்து வெளியே விடக்கூடாது" என்று உருக்கமாக கோரிக்கை வைத்தார். சிறுமியின் தைரியமான சாட்சியத்தை ஏற்றுக் கொண்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
சிறுமிக்கு நீதிபதி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நீ 'அங்கிள்' என்று அழைத்த அந்த நபர் இனி ஒருபோதும் சுதந்திரமாக நடமாட முடியாது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு கூண்டுக்குள் வாழ்வார்; அந்தக் கூண்டுக்குள்ளேயே முதுமையடைந்து, அங்கேயே இறந்துபோவார். இனி ஒருபோதும் அவரால் உன்னையோ, உன் தங்கையையோ அல்லது வேறு எந்தக் குழந்தையையோ காயப்படுத்த முடியாது. இந்த நீதிமன்றம் கண்டதிலேயே மிகவும் தைரியமான சிறுமி நீதான். நீ நீதிமன்றத்திற்கு வந்து, உனக்குத் தீங்கு இழைத்த அந்த நபரைச் சுட்டிக்காட்டி, உண்மையை தைரியமாகச் சொன்னாய்.
உன் குழந்தைப் பருவத்தை இந்த நீதிமன்றத்தால் உனக்குத் திரும்பத் தர முடியாது. ஆனால், உன் வார்த்தைகள் செவிமடுக்கப்பட்டன; உன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. உனக்குத் தீங்கு இழைத்த அந்த நபர், இனி ஒருபோதும் சுதந்திரமான மனிதராகச் சூரிய ஒளியைப் பார்க்க முடியாது. மகளே, உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ். பள்ளிக்குச் செல்; நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள். சிரி, விளையாடு, கனவு காண்பாயாக. உன் துணிச்சலை இந்த நீதிமன்றம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று நீதிபதி ரஞ்சனி ரங்கா தனது கடிதத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் இந்த உருக்கமான கடிதத்தை டெல்லி உயர் நீதிமன்றமும் வெகுவாக பாராட்டியுள்ளது. 10 வயதாகும் அந்த சிறுமிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், அவளது எதிர்கால நம்பிக்கையை உயர்த்தும் வகையிலும் அமைந்துள்ள இந்தச் சிறப்பு செய்தியையும், ரூ.10.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையையும் உடனடியாக அவரிடம் நேரில் கொண்டு சேர்க்குமாறு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு (DLSA) உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.