

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தனியார்மயமாக்கல் கிடையாது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மறுத்துள்ளது.
இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு பொறுப்புகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து இஸ்ரோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இது முற்றிலும் ஆதாரமற்ற தவறான செய்திகள் என்றும், இஸ்ரோவை தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் திட்டமோ இல்லை என தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், "இந்தியாவின் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமாக இஸ்ரோவே தொடர்ந்து செயல்படும்.
தேசிய அளவிலான விண்வெளி திட்டங்கள், விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுப் பணிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இஸ்ரோவின் முக்கியப் பங்கு தொடரும்.
விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை வரவேற்பது இஸ்ரோவின் பொறுப்புகளைக் குறைப்பதற்காக அல்ல.
மாறாக இந்தியாவின் அடுத்தகட்ட விண்வெளி இலக்குகளில் இஸ்ரோ அதிக கவனம் செலுத்துவதற்காகவே ஆகும்.
ஏற்கனவே வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேலும் விரிவுபடுத்துவதில் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்.
இதனால் இஸ்ரோவின் முக்கியத்துவம் மாறவில்லை. மாறாக இந்தியாவின் விண்வெளித் துறையின் அளவும் கட்டமைப்பும் விரிவடைகிறது.
தற்போதைய சீர்திருத்தங்களை தனியார்மயமாக்கலாகப் பார்க்காமல், விண்வெளித் துறையின் திறன் மேம்பாடாகவே பார்க்க வேண்டும்" என இஸ்ரோ விளக்கியுள்ளது.
முன்னதாக, உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பொறுப்புகள் சில தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்திகளின் பின்னணியில் இஸ்ரோ ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய 9 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த செப்டம்பர் 4 அன்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணனுக்குக் கடிதம் எழுதியிருந்தன.
அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் இஸ்ரோவின் எதிர்காலப் பங்கு குறித்து தெளிவுபடுத்துமாறு அந்த அமைப்புகள் கோரியிருந்த நிலையில், தற்போது இஸ்ரோ இந்த விளக்கத்தை அளித்துள்ளது.