

மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. மம்தா பானர்ஜி, மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதற்கிடையே நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். இவர் தெரிவித்த சில மணி நேரங்களில் நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானை போலீசார் கைது செய்துள்ளது. அவர் மீதான பழைய கொலை வழக்கில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.
2007-ம் ஆண்டு நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் கூறுகையில் "பாஜக-வின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் 'வென்டிலேட்டர்' உதவியுடன் உயிர்வாழும் நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை (Opposition-Mukt Bharat) உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நமது மகத்தான அரசியலமைப்பு சார்ந்த ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்தான நாடாக (Banana Republic) மாற்றும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.
மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில நிமிடங்களிலேயே, 2007-ம் ஆண்டைச் சேர்ந்த, நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த ஒரு வழக்கை கையில் எடுத்து எங்கள் வேட்பாளரை கைது செய்தது, ஜனநாயகத்தைக் கைப்பற்ற பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே காட்டுகிறது. அடக்குமுறை மிக்க ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடி அவர்களை வெளியேற்றிய கட்சி எங்களுடையது. எனவே, அவர்களைப் போலச் செயல்படும் இவர்களின் இத்தகைய மலிவான மிரட்டல் உத்திகள் எங்களை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. அதிகாரத்தின் இந்த தவறான பயன்பாட்டை எதிர்த்து நாங்கள் உறுதியாக நிற்போம். அத்துடன் பாஜகவின் தோல்வியையும் உறுதி செய்வோம்" என்றார்.