கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகள்: தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது

தனது கள்ளக்காதலுக்கும் சுதந்திரமான வாழ்க்கைக்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பார்கள் என நிவேத்யா கருதியுள்ளார்.
Mother kills children
Published on: 
Summary

பாலக்காடு அருகே பெற்ற பிள்ளைகளையே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து, விபத்து போல நாடகமாடிய தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள மேனோன்பாறை கூராங்காடு பகுதியில் வசிப்பவர் ஜான் குமார். மர வெட்டும் தொழிலாளியான இவரது மனைவி நிவேத்யா (29). இந்தத் தம்பதிக்கு ஜெனிபர் ஜூலியட் (5) என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் இருந்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் திடீரென காணாமல் போனதாக கூறி நிவேத்யா கூச்சலிட்டார். அதைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறையில் இருந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டியில் குழந்தைகள் மூழ்கிக் கிடப்பது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்து நாடகம் அம்பலம்

ஆரம்பத்தில் குழந்தைகள் இருவரும் விளையாடும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றே கருதப்பட்டது. இருப்பினும், கணவர் ஜான் குமார் மற்றும் உறவினர்களுக்குச் சம்பவத்தின் மீது சந்தேகம் எழுந்தது. தகவலறிந்து வந்த கொழிஞ்சாம்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நிவேத்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், நிவேத்யாவே குழந்தைகளைத் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

நிவேத்யாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனது கள்ளக்காதலுக்கும் சுதந்திரமான வாழ்க்கைக்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பார்கள் என நிவேத்யா கருதியுள்ளார். கணவர் ஜான் குமார் வழக்கம்போல வேலைக்குச் சென்றதை உறுதிசெய்த பிறகு, குளியலறை தண்ணீர் தொட்டியில் குழந்தைகளை மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், காவல்துறைக்கும் வீட்டினருக்கும் சந்தேகம் வராதபடி குழந்தைகள் தவறி விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.

காவல்துறை நடவடிக்கை

தற்போது நிவேத்யாவைக் கைது செய்துள்ள காவல்துறையினர், இக்கொலைச் சம்பவத்தில் அவருடைய கள்ளக்காதலனுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே தன் இரு குழந்தைகளையும் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com