மங்களூருவில் உயர் நீதிமன்றக் கிளை: சாத்தியக்கூறுகளை ஆராய 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு

பெங்களூருவில் முதன்மை அமர்வும், தார்வாட் மற்றும் கலபுரகியில் இரு கிளைகளும் இயங்கி வருகின்றன.
High Court Bench in Mangaluru
Published on: 
Summary

கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மங்களூருவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் புதிய கிளையை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை தலைமை நீதிபதி அமைத்துள்ளார்.

முந்தைய முதல்வர் சித்தராமையா, கடந்த மே மாதம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விபு பக்ருவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், தட்சிண கன்னடா மாவட்டத்தின் தலைநகரான மங்களூருவில் உயர் நீதிமன்றக் கிளை அமைப்பதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இதற்காக 50,000 சதுர அடி நிலம் ஒதுக்கீடு செய்ய உறுதியளிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி விபு பக்ரு உத்தரவின்படி அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் நீதிபதிகள் அனு சிவராமன், எஸ்.ஜி.பண்டிட் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் மங்களூரு மட்டுமன்றி, உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு-மடிகேரி, ஹாசன், தாவணகெரே மற்றும் உத்தர கன்னடா ஆகிய பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தவுள்ளனர். அப்பகுதி பொதுமக்களுடனும் வழக்குரைஞர்களுடனும் கலந்தாலோசித்து, அதன் அடிப்படையில் விரிவான அறிக்கையைத் தயாரித்துத் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

மங்களூரு கிளையின் அவசியம்

பெங்களூருவில் முதன்மை அமர்வும், தார்வாட் மற்றும் கலபுரகியில் இரு கிளைகளும் இயங்கி வருகின்றன. பெங்களூருவிலிருந்து மங்களூரு சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் வழியாகச் செல்லும் இச்சாலைகளில் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதால், தலைநகருக்கு வந்து செல்ல அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். இப்போக்குவரத்துச் சவால்களைக் கருத்தில் கொண்டு, மங்களூருவில் உயர் நீதிமன்றக் கிளை அமைப்பது இன்றியமையாதது என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com