திருப்பதி கோயிலுக்கு ரூ.200 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க நகைகளை நன்கொடை அளித்த சென்னை தொழிலதிபர் - யார் இந்த வர்தமான் ஜெயின்?

வர்தமான் ஜெயின் ‘ஆக்சஸ் ஹெல்த்கேர்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் துணைத் தலைவராக உள்ளார்.
திருப்பதி கோயிலுக்கு ரூ.200 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க நகைகளை நன்கொடை அளித்த சென்னை தொழிலதிபர் - யார் இந்த வர்தமான் ஜெயின்?
Published on: 

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க நகைகளை நன்கொடையாக வழங்கியதை அடுத்து கவனம் ஈர்த்து வருகிறார்.

கோயில் வரலாற்றில், அதிக காணிக்கை செலுத்தியவர்களில் ஒருவராக தற்போது பார்க்கப்படுகிறார்.

ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு முன்னிலையில், நேற்று (நவ.26) வர்தமானும், அவரது மனைவியும் வெங்கடேஸ்வரப் பெருமானுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 46 தங்க நகைகளை கோயிலில் சமர்ப்பித்தனர் .

இந்தத் தொகுப்பில் ஒரு கிரீடம், கழுத்தணிகள், கைவளைகள், இடுப்பு ஆபரணங்கள் மற்றும் பிற பாரம்பரிய ஆபரணங்கள் அடங்கும்; இவற்றில் சில வைரங்கள் பதிக்கப்பட்டவை.

முன்னதாக மின்சாரப் பேருந்துகள், தீவன ஆலை, நாணயம் தரம் பிரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல நன்கொடைகளை கோயிலுக்கு வழங்கியுள்ளார்.

யார் இவர்?

வர்தமான் ஜெயின் ‘ஆக்சஸ் ஹெல்த்கேர்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் துணைத் தலைவர் ஆவார்.

1997-ல் மருத்துவ பில்லிங் நிறுவனத்தைத் தொடங்கிய வர்தமான் ஜெயின், டெல் நிறுவனத்தில் உயர் பதவி வகித்த பிறகு ‘ஆக்சஸ் ஹெல்த்கேர்' (Access Healthcare) என்ற உலகளாவிய சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவினார்.

சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் பயின்றவர்; தொடர்ந்து அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் நியூ மவுண்டன் கேபிட்டல் நிறுவனம் சுமார் 1.5 முதல் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் டிரஸ்ட் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராகவும், ஸ்ரீ சரிதா ஜெயின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.

X