"மத்திய அரசுக்கு பணிந்துபோன சந்திரசூட்.. நீதித்துறையில் அழுத்தம்" - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுயசரிதையால் பரபரப்பு

ஒரு நீதிபதியின் சாதி குறித்து அரசு தேவையற்ற விசாரணை நடத்திய ஒரு சம்பவத்தையும் நீதிபதி கவுல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதி
Published on: 
Summary

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் சுயசரிதையில் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய அரசுக்கு பணிந்து நடந்து கொண்டது குறித்து குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் எழுதிய 'பயமோ பாரபட்சமோ இன்றி' என்ற சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதில் உள்ள தகவல்கள் சில வெளிவந்துள்ளன.

அதில் நீதிமன்றத்தின் சுதந்திரமான செயல்பாடுகளை மத்திய அரசு கட்டுப்படுத்துவது பற்றிய தகவல்களை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளது.

மோடி அரசின் கீழ் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

சுயசரிதையில் பரபரப்பு தகவல்கள்

தகவலின்படி, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு நீதிபதியின் சாதி குறித்து அரசு தேவையற்ற விசாரணை நடத்திய ஒரு சம்பவத்தையும் நீதிபதி கவுல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் நியமனம் தொடர்பான விஷயங்களில் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மத்திய அரசுக்கு மிகவும் பணிந்து நடந்துகொண்டார் என்பதையும் நீதிபதி கவுல் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு, பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் சில அம்சங்களை மறுஆய்வு செய்ய முடிவு செய்திருந்தது.

இருப்பினும், நீதிபதி கவுலிடம் கலந்தாலோசிக்காமலேயே இந்த வழக்கு எதிர்பாராதவிதமாக மற்றொரு அமர்வுக்கு மாற்றப்பட்டது என்ற தகவலும் அந்த சுயசரிதையில் இடம்பெற்றுள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இதுகுறித்து தன் சமூக வலைதள பதிவில், "நீதிபதி நியமன செயல்முறைகள் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக முன்னாள் தலைமை நீதிபதி பகிரங்கமாகத் தெரிவித்திருப்பது, நீதித்துறையின் சுதந்திரம் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் நியமனங்களில் மத்திய அரசின் தலையீடு, கொலீஜியம் கூட்டங்களுக்கு முன் அரசின் ஒப்புதலைக் கோருவது, மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகளில் செய்யப்படும் இயல்புக்கு மாறான மாற்றங்கள் ஆகியவை நாட்டின் உச்சபட்ச அமைப்பான நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டின் மீதான அத்துமீறல்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "நீதித்துறை நியமனங்களுக்கு அரசின் ஒப்புதலுக்காக அழுத்தம் கொடுக்கப்படும்போதும், முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் சீர்குலைக்கப்படும்போதும், அது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அழுத்தம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com