டிபன் பாக்ஸில் வெடிகுண்டு.. சண்டிகரில் பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டம் முறியடிப்பு - 3 பேர் கைது

வேறு யாரெல்லாம் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டிபன் பாக்ஸில் வெடிகுண்டு
டிபன் பாக்ஸில் வெடிகுண்டு
Published on

சண்டிகரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செக்டார் 43 பகுதியில் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையத்திற்கு அருகே 3 இளைஞர்களை சண்டிகர் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து பையில் டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஇடி வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

யார் இவர்கள்?

கைது செய்யப்பட்டவர்கள் தார்ன் தரான் பகுதியைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் (19), ஜஷன்பிரீத் சிங் (21) மற்றும் அமிர்தசரஸை சேர்ந்த பிரக்பிரீத் சிங் என்ற பிரப் (19) ஆகிய மூவர் ஆவர்.

இவர்கள் 'பப்பர் கல்சா இன்டர்நேஷனல்' (BKI) என்ற தனி நாடு கோரும் காலிஸ்தானி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து 5 கிலோ ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், வெடிபொருளை இயக்குவதற்கான பவர் சோர்ஸ் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் 1 துப்பாக்கி, 1 மேகசின் மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சதித்திட்டம்

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பப்பர் கல்சா அமைப்பின் முக்கியச் செயல்பாட்டாளரான சத்னம் என்ற சத்தா நௌஷேரா என்பவருடன் இந்த இளைஞர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

அவரது வழிகாட்டுதலின் பேரில், சண்டிகரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இந்த ஐஇடி வெடிகுண்டை வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

இந்த வெடிபொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன, வேறு யாரெல்லாம் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com