கேரளத்தில் இன்று அதிகாலை விபத்து: மரத்தில் கார் மோதி 2 பேர் பலி

வேகமாக சென்ற கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.
விபத்தில் நொறுங்கிய காரையும், இறந்த 2 பேரையும் படத்தில் காணலாம்.
Published on: 
Summary

கேரளத்தில் இன்று அதிகாலை கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விபத்துக்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கேரளம் மாநிலம் ஷோரனூர் கிழக்கு மணிசேரி, பந்தல் பகுதியைச் சேர்ந்த வைஷாக், அஜய், கோவிந்த், ஸ்ரீஜித் மற்றும் நிதின் ஆகியோர் ஒரு காரில் ஓட்டப்பாலம் பகுதிக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை அந்த கார் பாலக்காடு-குளப்புள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தது.

கட்டுப்பாட்டை இழந்த கார்

திரிக்கங்கோடு என்ற இடத்தில் சென்ற போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. வேகமாக சென்ற கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்தவர்கள் காருக்குள் நசுங்கினர். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் காரை ஆயுதம் கொண்டு வெட்டி, உள்ளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அப்போது 2 பேர் இறந்து விட்டதும், 3 பேர் படுகாயத்துடன் இருப்பதும் தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரையும் வாணியம்குளம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் வைஷாக் மற்றும் அஜய் என அடையாளம் தெரிந்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X