

தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க்கின் செயல்பாடுகள் குறித்து 2 தேர்தல் ஆணையர்கள் அளித்த புகாரின் மீது அமைச்சரவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சக தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சந்து ஆகியோரின் கருத்தை நிராகரித்து தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது அரசியலிலும் புயலை கிளப்பி தற்போது ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பாஜகவுக்கு சாதகமாக அவர் தேர்தல் மற்றும் எஸ்ஐஆரில் முறைகேடு செய்ததாக அவை குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க்கின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சந்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சரவை மறுத்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையர்கள் தங்களது தனிப்பட்ட முறையில் இந்தப் புகார்களை அளித்துள்ளதாகவும், இவற்றைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தகவலாக கருத முடியாது என்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது
தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், மனிஷ் கார்க்கின் செயல்பாடு குறித்த கவலைகளை வெளிப்படுத்தி, ஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதனுக்கு தனித்தனியாக கடிதங்கள் எழுதியிருந்தனர்.
தேர்தல் ஆணையத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளையோ கலந்தாலோசிக்காமல், மூத்த துணைத் தேர்தல் ஆணையர்கள், துணைத் தேர்தல் ஆணையர்கள், தலைமை இயக்குநர்கள் மற்றும் சம பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு இடையேயான பணிப் பங்கீட்டை கார்க் திருத்தியமைத்ததாக அந்தக் கடிதங்களில் குற்றம் சாட்டப்பட்டது.
பணி ஒதுக்கீட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், நடைமுறையில் உள்ள வழிமுறைகளுக்கு எதிரானது என்றும், மேலும் அவை தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-இன் விதிகளையும் மீறுவதாகவும் இரு ஆணையர்களும் வாதிட்டுள்ளனர்.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான மணீஷ் கார்க், 2024 செப்டம்பர் 2 அன்று அமைச்சரவையின் நியமனக் குழுவால் தேர்தல் ஆணையத்திற்கு நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 5 அன்று அவருக்கு எதிரான இரு கடிதங்களும் பெறப்பட்டதை அமைச்சரவைச் செயலாளர் அலுவலகம் உறுதி செய்தது.
லோகேஷ் கே. பத்ரா என்ற சமூக ஆர்வலர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட பதிலில், அமைச்சரவை இது குறித்து தன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
"மேற்கண்ட தகவல்கள் ஆணையர்களிடம் இருந்து தனிப்பட்ட முறையில் வந்துள்ளன. அவற்றை உரிய தீவிரத்துடன் அணுக வேண்டும் என்றாலும், அவற்றை ஒட்டுமொத்த ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களாகக் கருத முடியாது" என அமைச்சகம் தன் பதிலில் தெரிவித்தது.
இரு கடிதங்களின் நகல்களும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கும், மத்திய அரசு அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு மற்றும் நியமனத் துறைக்கும் அனுப்பப்பட்டன. தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கும் நகல்கள் அனுப்பப்பட்டன.
தேர்தல் ஆணையம் என்பது, நிர்வாகத்தின் தலையீடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகசெயல்படுவதற்காக அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே ஆணையத்திடமிருந்து ஒட்டுமொத்த அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு இல்லாத நிலையில், தனிப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ளது.
முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
ஆணையம் முழு உண்மைகளையும் வெளியிட வேண்டும் என்று அவர் கூறினார். ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டதா மற்றும் அவை குறித்து விவாதம் நடந்ததா என்பதை அது தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ், சந்துவும் ஜோஷியும் ஏன் முழு தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தைக் கோரவில்லை? அந்த முயற்சி தோல்வியடைந்தால், அவர்கள் ஏன் குடியரசுத் தலைவரை அணுகவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.