

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டம் மண்டி கிராமத்தில் பேப்பர் தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் தொழிற்சாலையின் சுற்றுச்சுவரைத் தாண்டி தப்பிய ராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்த விக்ரம் என்ற தொழிலாளி கடந்த ஜூன் 22 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
காவல்துறையினர் தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி, சிறார்கள் உட்பட 12 கொத்தடிமைகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
அவர்களில் சிலர் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தொழிற்சாலையில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியும் தொழிற்சாலை உரிமையாளருமான அங்கித் பால்யன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை பிரதீப் பால்யன் மற்றும் தொழிற்சாலை மேற்பார்வையாளர் சிவா தியாகி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கித் பால்யனை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை காவல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தொழிற்சாலை சுமார் ஏழு ஆண்டுகளாக இயங்கி வந்ததாகத் தெரியவந்துள்ளது.
நல்ல சம்பளம், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை வழங்குவதாக ஆசை காட்டி, ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைக்கு வந்த பின்னர் அவர்களின் கைபேசிகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனால், அவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்புகொள்வதோ, தொழிற்சாலையை விட்டு வெளியேறுவதோ தடுக்கப்பட்டது.
உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் தங்களை தினமும் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை வேலை செய்ய வைத்ததாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர்.
யாரேனும் எதிர்த்தால், அவர்கள் இரும்புக் கம்பிகள், தடிகளாலும் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். தினமும் ரொட்டி துண்டு உணவாக வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் உடல்களில் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் துன்புறுத்தலுக்கான அறிகுறிகள் இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
தொழிலாளர்கள் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க காவலுக்கு பிட்புல் நாய்கள் அங்கு வளர்ப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
தொழிற்சாலைக்குள்ளேயே சில தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுகுறித்தும் காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.