பா.ஜ.க ஆட்சியில் மேற்கு வங்கம் 150 நாட்கள் நிறைவு – மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைத்துள்ளதா?

பா.ஜ.க ஆட்சியில் மேற்கு வங்கம் 150 நாட்கள் நிறைவு – மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைத்துள்ளதா?
MamataBanerjee - BJP
Published on: 
Summary

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, 294 சட்டமன்றத் தொகுதிகளில் 207 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மே 9 அன்று சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

காங்கிரஸுக்கு 22 ஆண்டுகள், கம்யூனிஸ்டுகளுக்கு 34 ஆண்டுகள், திரிணாமுல் காங்கிரஸுக்கு 15 ஆண்டுகள் வாய்ப்பளித்துவிட்டு, இன்று அவர்களை அரசியலின் ஓரத்திற்குத் தள்ளியுள்ளனர் மேற்குவங்க மக்கள்.

தற்போது சுவேந்து அதிகாரி அரசு ஆட்சியில் 150 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், மாநிலத்தில் உண்மையில் 'பரிவர்தன்' (மாற்றம்) நடந்துள்ளதா? அல்லது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும்தானா? என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பா.ஜ.க அரசின் சாதனைகள்

கடந்த 150 நாட்களில் சுவேந்து அதிகாரி அரசு முந்தைய ஆட்சிக் கலாச்சாரத்தை மாற்ற பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறுகிறது.

அன்னபூர்ணா யோஜனா என்ற திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 'லக்ஷ்மீர் பந்தர்' திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள 1.5 கோடி பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ. 36,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முந்தைய அரசால் முடக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் தற்போது மாநிலம் முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்புகள் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் 1 லட்சம் அரசுப் பணிகளை நிரப்ப நிதியமைச்சர் ஸ்வபன் தாஸ்குப்தா பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். மேலும், முடங்கிக்கிடந்த ரூ. 4,500 கோடி மதிப்பிலான 17 ரயில்வே திட்டங்கள் மற்றும் கொல்கத்தா மெட்ரோ திட்டங்கள் (ஜோகா-எஸ்பிளனேடு, நியூ கரியா-ஏர்போர்ட்) முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தொழிலதிபர் கௌதம் அதானி, 2035-க்குள் மேற்கு வங்கத்தில் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். நியூ டவுனில் ரூ. 4,000 கோடியில் 2,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் அமையவுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான அணுமின் நிலையத் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது.

பா.ஜ.க-வுக்கு எழுந்துள்ள சவால்களும் நிர்வாகக் குளறுபடிகளும்

வளர்ச்சித் திட்டங்கள் ஒருபுறமிருந்தாலும், கள நிலவரம் பா.ஜ.க அரசுக்குச் சாதகமாக மட்டும் இல்லை.

பழைய திட்டத்திலிருந்து புதிய அன்னபூர்ணா யோஜனாவிற்குப் பயனாளர்களை மாற்றும் 'சரிபார்ப்பு' பணிகளால், தகுதியான பல பெண்களுக்குப் பணம் கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதனால் செப்டம்பர் மாதத்தில் மாநிலத்தின் பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழில்துறை முதலீடுகள் அனைத்தும் தற்போது 'ஒப்பந்த' அளவிலேயே உள்ளன. அவை களத்தில் தொழிற்சாலைகளாக மாறி, இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பற்றாக்குறையைத் தீர்க்க இன்னும் நீண்ட காலம் பிடிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு: "மாறிய முகங்கள்... மாறாத வன்முறை"

முந்தைய அரசின் 'தோலாபாஜி' (பணப்பறிப்பு), ஊழல் மற்றும் குண்டாயிசத்தை ஒழிப்பதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க-வுக்கு, சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

மே 4 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திரிணாமுல், சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அலுவலகங்கள் மீது தொடர் தாக்குதல்களும் தீவைப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி மற்றும் இடதுசாரி மாணவர்களிடையே வன்முறை வெடித்தது. மேலும், செப்டம்பர் 6 அன்று கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற 'ஆனந்தபஜார் பத்ரிகா' நாளிதழ் அலுவலகத்தை ஒரு கும்பல் முற்றுகையிட்டு, அதன் சுவர்களில் காவி நிறம் பூசி அச்சுறுத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பா.ஜ.க-வின் 'திரிணாமுல்மயமாக்கல்'

பா.ஜ.க அரசு எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் என்னவென்றால், பழைய திரிணாமுல் காங்கிரஸின் வன்முறைக் கலாச்சாரம் அப்படியே பா.ஜ.க-விற்குள் குடியேறியுள்ளது என்பதுதான்.

நேற்று வரை திரிணாமுல் காங்கிரஸில் இருந்த சுகேந்து சேகர் ராய், கோயல் மல்லிக், பிரகாஷ் சிக் பரைக் மற்றும் சுஸ்மிதா தேவ் போன்ற தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைந்து, பா.ஜ.க சார்பாக ராஜ்யசபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

"டி.எம்.சி குண்டர்களால் பல கொடுமைகளை அனுபவித்த உண்மையான பா.ஜ.க தொண்டர்களைப் புறக்கணித்துவிட்டு, நேற்று வந்தவர்களுக்குப் பதவி கொடுப்பது பா.ஜ.க-வினரிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது" எனத் திரிபுரா முன்னாள் ஆளுநர் ததாகதா ராய் எச்சரித்துள்ளார்.

அரசியல் ஆய்வாளர் சயந்தன் கோஷ் கூறுகையில், "மக்கள் டி.எம்.சி தலைவர்களுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், அதே தலைவர்கள் இப்போது பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரியுடன் காலை உணவு சாப்பிடுவதைக் கண்டு மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேற்கு வங்க அரசியலில் முகங்கள் மட்டுமே மாறியுள்ளன, பழக்கவழக்கங்கள் மாறவில்லை" என்று சாடியுள்ளார்.

150 நாட்கள், கலவையான ஆட்சி

சுவேந்து அதிகாரி அரசின் முதல் 150 நாட்கள் ஒரு கலவையான சித்திரத்தையே தருகின்றன. மத்திய அரசின் திட்டங்கள் வந்துள்ளன, பெண்களுக்கான நிதியுதவி இரு மடங்காகியுள்ளது. ஆனால், வேலைவாய்ப்பு இன்னும் வாக்குறுதியாகவே உள்ளது, வன்முறையும் தொடர்கிறது.

மேற்கு வங்க மக்கள் மிகவும் பொறுமையானவர்கள், அதே சமயம் தவறு செய்தால் மன்னிக்காதவர்கள். அவர்கள் காங்கிரஸுக்கு 22 ஆண்டுகள், கம்யூனிஸ்டுகளுக்கு 34 ஆண்டுகள், திரிணாமுல் காங்கிரஸுக்கு 15 ஆண்டுகள் வாய்ப்பளித்துவிட்டு, இன்று அவர்களை அரசியலின் ஓரத்திற்குத் தள்ளியுள்ளனர்.

150 நாட்களை நிறைவு செய்துள்ள பா.ஜ.க அரசு, இந்த வரலாற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com