பாஜக மாநிலங்களவை எம்.பி. ராம்ராவ் வாட்குடே மாரடைப்பால் மறைவு

72 வயதான வட்குடே மகாராஷ்டிராவில் உள்ள தங்கர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவர் ஆவார்.
ராம்ராவ் வாட்குடே
Published on: 
Summary

பாஜக மாநிலங்களவை எம்.பி மாரடைப்பால் காலமானார்.

பாஜக மாநிலங்களவை எம்.பி.யான ராம்ராவ் வாட்குடே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாரடைப்பால் காலமானார்.

நெஞ்சு வலியால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர்கள் கடுமையாக முயன்றபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

8 மாதங்களுக்கு முன்புதான், ராம்ராவ் வட்குடே பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

72 வயதான வட்குடே மகாராஷ்டிராவில் உள்ள தங்கர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவர் ஆவார்.

ராம்ராவ் வட்குடே

அரசியலில் நுழைவதற்கு முன்பு, ராம்ராவ் வட்குடே ஆடு மேய்ப்பவர்களின் அமைப்பான ஷெலி-மெண்டி மகாசங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

அவர் தனது அரசியல் வாழ்க்கையை தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தொடங்கினார். மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

2019ல், அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான உறவைத் துண்டித்துக்கொண்டு பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, கட்சி அவரிடம் முக்கியமான கட்சி பொறுப்புகளை ஒப்படைத்தது.

2021ல், அவர் பாஜகவின் ஹிங்கோலி மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஹிங்கோலி மக்களவைத் தொகுதியின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

சமூகத்தில் அவருக்கு இருந்த வலுவான செல்வாக்கும், அனுபவமும் கட்சிக்குள் அவருக்கு ஒரு முக்கிய இடம் பெற்று தந்தது. கடந்த ஏப்ரல் 3இல் அவர் மாநிலங்களவைக்கு தேர்வானார்.

அவரது மறைவு, மகாராஷ்டிர அரசியலுக்கும் தங்கர் சமூகத்திற்கும் ஒரு பெரும் இழப்பாகும்.

X