

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என மாற்றுவதற்காக புதிய மசோதா ஒன்றை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பெயர் மாற்றுவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய அக்கட்சி பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தின் பெயரை மாற்றும் முயற்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1999-ல் இடதுசாரி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ‘பஸ்சிம் பங்கா’ என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 2011-ல் ஆட்சிக்கு வந்த திரிணாமுல் காங்கிரஸும் இந்த பிரச்னையை எழுப்பியிருந்தது.
2016-ல் பெங்காலி, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பயன்படுத்த வெவ்வேறு பெயர்களை மாநில அரசுப் பரிந்துரைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘'பங்களா’ என்பதை மாநிலத்தின் பெயராகப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது.
மத்திய அரசு இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காததால், பெயர் மாற்றப்படாமல் அப்படியே இருந்தது.
மேற்கு வங்கம் ஏற்கனவே பெங்காலி மொழியில் "பஸ்சிம் பங்கா" என்றுதான் அறியப்படுகிறது.
ஒருவேளை இந்த மசோதா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு மாநிலத்தின் பெயர் மாறக்கூடும்.