தலைமை நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய பார் கவுன்சில் தலைவர் - என்ன நடந்தது?

இந்திய பார் கவுன்சில் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மனன் குமார் மிஸ்ரா மன்னிப்பு கேட்டுள்ளார்.
தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர்
தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர்
Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் எச்சரித்ததை தொடர்ந்து, ஐதராபாத் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களிடம் இந்திய பார் கவுன்சில் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மனன் குமார் மிஸ்ரா மன்னிப்பு கேட்டுள்ளார்.

பின்னணி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த்தை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் மற்றும் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினர்.

காரணம்

இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அழைத்து, ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் மீதான காவல்துறை தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையின்போது, வீடியோ ஆதாரங்களை பார்க்க நேரமில்லை என மறுத்தது ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவரை அழைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தடை

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அப்பல்கலைக்கழகத்தில் 2026ல் பட்டம் பெறும் மாணவர்கள் எவரையும் மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞராகப் பதிவு செய்யக் கூடாது என மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.

இத்தடை உத்தரவு மாணவர்களின் தொழில்முறை எதிர்காலத்தைப் பாதிக்கும் என சமூக வலைதளங்களிலும் சட்டத் துறையிலும் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் கிளம்பின.

எச்சரிக்கை

இந்த விவகாரம் குறித்த நீதிமன்ற அமர்வில் பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், "மாணவர்கள் அமைதியான வழியில் போராட முழு உரிமையுள்ளது. இதில் தலையிட BCIக்கு எந்த உரிமையும் இல்லை. மாணவர்கள் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது குற்றவியல் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது" என BCIயை எச்சரித்தார்.

தடை நீக்கம்

மனன் குமார் மிஸ்ரா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய இந்திய பார் கவுன்சில், தனது உத்தரவை திரும்பப்பெற்றது.

பெரும்பான்மையான மாணவர்கள் அப்பாவிகள் என்பதால், "தவறு செய்யாமல் எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படக் கூடாது" எனக் கூறி, மாணவர்கள் தாங்கள் விரும்பும் மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்தது.

மன்னிப்பு

இந்நிலையில் பார் கவுன்சில் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மனன் குமார் மிஸ்ரா, சட்ட மாணவர்களுக்கு சுதந்திர தினக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர், ""சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் எனது வார்த்தைகள்/கடிதம் சட்ட மாணவர்களின் மனதைப் புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் தங்களது சொந்தக் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும் அரசியலமைப்புச் சட்டப்படி முழு உரிமை உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டிள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதும் பங்கேற்காமல் இருப்பதும் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும், இதில் வெளியாட்களின் அல்லது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்றும் மிஸ்ரா தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com