அங்கிதா பண்டாரி வழக்கு: முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-விடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை

அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
Ankita Bhandari case EX MLA Rathore
Published on: 

உத்தரகண்ட் மாநிலத்தின் அங்கிதா பண்டாரி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, உண்மை கண்டறியும் சோதனை (polygraph test) மற்றும் நர்கோ-பகுப்பாய்வு (narco-analysis test) சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதற்காக, முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் ரத்தோர் குஜராத் புறப்பட்டு சென்றார். உண்மையை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நவம்பர் 24-ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தில் ஆஜராகி, நர்கோ-பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுமாறு சி.பி.ஐ. அவருக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கில் ஒரு வி.ஐ.பி. நபரின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

VIP-க்கு தொடர்பு:

நடிகை ஊர்மிளா சனாவா என்பவர், சுரேஷ் ரத்தோருடன் உரையாடியதாக கூறப்படும் சில ஆடியோ பதிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த ஆடியோ பதிவுகளில், இந்த கொலையில் ஒரு 'வி.ஐ.பி.' நபரின் தொடர்பு இருப்பது போன்ற குறிப்புகள் இருந்தன.

ரிஷிகேஷிற்கு அருகில் உள்ள 'வந்தாரா ரிசார்ட்' என்ற இடத்தில் வரவேற்பாளராக பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா, செப்டம்பர் 18, 2022 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா மற்றும் அவரது பணியாளர்களான சௌரப் பாஸ்கர், அங்கித் குப்தா ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

திங்கள்கிழமை (நவ. 23) காந்திநகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய ரத்தோர், சிபிஐ அனுப்பிய நோட்டீஸ் தனக்கு கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.

அங்கிதா பண்டாரி வழக்கில் சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணையில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தனது தரப்பு விளக்கத்தை அளிக்கவும், விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்கவும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

வாக்குமூலம் பதிவு:

அங்கிதாவிற்கு நீதி கிடைக்கவும், உண்மையை வெளிக்கொண்டு வரவும் "விசாரணை அமைப்பிற்கு அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பு வழங்குவேன். அங்கிதா பண்டாரி எனக்கு ஒரு மகள் போன்றவர். இந்த விவகாரம் தொடர்பாக உண்மையைச் சொல்ல எனக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்," என்று ரத்தோர் தெரிவித்தார்.

முன்னதாக, சிபிஐ குழு ஒன்று ஹரித்வாருக்கு சென்று ரத்தோரிடம் விசாரணை நடத்தியது. மேலும், சனாவரின் வாக்குமூலத்தையும் புலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ளது.

X