

ஆந்திராவில் வகுப்பறைக்குள் சென்று 10ம் வகுப்பு மாணவியை ரம்பத்தால் அறுத்த குற்றவாளி ஹேமந்தின் வலது கால் அகற்றப்பட்டுள்ளது.
போலீசார் பிடிக்க சென்றபோது தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஹேமந்தின் காலில் காயங்கள் ஏற்பட்டன.
இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, காலில் திசுக்கள் அழுகத் தொடங்கியதால், வலது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு அடுத்த அய்யவாரிப் பள்ளியை சேர்ந்தவர் கோபிகா( வயது 15).
இவர் ரப்தாடுவில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் (21) என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார்.
இந்த காதலுக்கு கோபிகா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று (அக்.31) பள்ளிக்குள் புகுந்து மரம் அறுக்க பயன்படும் மின்சார ரம்பத்தால் கோபிகாமீது ஹேமந்த் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் கோபிகா பலத்த காயமடைந்தார். கோபிகாமீதான தாக்குதலை தடுக்க வந்த லட்சுமி என்ற மாணவியையும் ஹேமந்த் தாக்கியதில், படுகாயமடைந்தார்.
பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
தாக்குதல் நடத்திவிட்டு ஆத்மக்கூர் காட்டுப்பகுதிக்கு சென்று ஹேமந்த் தலைமறைவாகினார். ஞாயிற்றுக்கிழமை அவரை பிடிக்க முயன்றபோது போலீசாருடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரை காலுக்கு கீழ் சுட்டுப்பிடித்தனர்.
போலீசாரின் இந்த தாக்குதலால், ஹேமந்தின் வலது காலுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, திசுச் சிதைவு ஏற்பட ஆரம்பித்தது.
திசுக்கள் அழுகி உடலின் மற்ற பாகங்களுக்கும் தொற்று பரவுவதைத் தடுக்க அவரது காலை அகற்றவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரத்த நாள, எலும்பியல் மற்றும் மயக்கவியல் நிபுணர்களைக் கொண்ட ஒரு மருத்துவக் குழு, இன்று நள்ளிரவுக்குப் பிறகு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவரது வலது காலை முழங்காலுக்கு மேலே துண்டித்தது.
இதனைத்தொடர்ந்து ஒரு சிறப்பு வார்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஹேமந்த் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஹேமந்த் மீது, கொலை முயற்சி குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 109(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறுமியின் முகத்திலும் முதுகிலும் ரம்பத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 118(1)-ன் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்குள் நுழைந்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 333-ம் சேர்க்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவி கோபிகாவின் புகாரின் அடிப்படையில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைச் சட்டத்தின் பிரிவு 3(2)(v)-ன் கீழும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த 10-ஆம் வகுப்பு மாணவியின் உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவர்கள் வென்டிலேட்டரை அகற்றிவிட்டதாகவும், சிறுமி மருத்துவ ஊழியர்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் மாநில சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் ஒய். சத்ய குமார் தெரிவித்தார்.