

மத்திய அரசின் அடக்குமுறையை சசி தரூர் விமர்சித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி தலையிலான போராட்டத்தில் நேற்று 3000 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பிய மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் டெல்லியில் தனித்தனியே கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிஜேபி நிறுவனர் தீப்கே மற்றும் நிர்வாகிகள் டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய அரசின் அடக்குமுறையை காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் விமர்சித்துள்ளார்.
நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாகவும், இதுபோன்ற 'எமர்-ஜென் சி'யை விட நமது இளம் தலைமுறைக்கு (ஜென் சி) ஒரு சிறந்த ஜனநாயகச் சூழல் தேவை என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் தான் கண்ட காட்சிகளை விவரித்த அவர் சந்திப்புகளில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கான்கிரீட் தடுப்புகள், சாலைகளில் நீண்ட வரிசைகள், சுமார் 22,000 காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் குவிப்பு, 250 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டது ஆகியவை தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய டெல்லியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டதை, மக்களின் நடமாடும் சுதந்திரத்தையும் தகவல் தொடர்பு உரிமைகளையும் கட்டுப்படுத்தும் ஒரு கடுமையான நடவடிக்கை என்று அவர் விவரித்தார்.
மேலும் அவர், "தேர்தல் செயல்முறையின் மீது முழு நம்பிக்கை கொண்ட ஒரு அரசாங்கம், மக்களின் கேள்விகளிலிருந்து விலகி ஓடக்கூடாது, மாறாக அவற்றை வரவேற்க வேண்டும்.
மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தேவைப்படுவது தெளிவான பதில்களே தவிர, தடியடி அல்ல," என்று தரூர் தெளிவுபடுத்தினார்.
அரசை கேள்வி கேட்பவர்களை ஒரு ஜனநாயகம் எவ்வாறு நடத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் வலிமை அளவிடப்படுகிறது.
தடுப்புகளை அமைப்பதும், மூடுவதும் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது." என்றார்.