கடத்தல் எச்சரிக்கையை தொடர்ந்து ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்: சோதனைகளுக்குப் பின் பயணம் தொடர்ந்தது

பாதுகாப்பு படையினர் விமானத்தை சோதனையிட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Air India Flight
Published on: 

பிராங்பேர்ட்டில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, விமான கடத்தல் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஜெய்ப்பூர் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை பொய்யானது என தெரியவந்ததை அடுத்து, பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு விமானம் தனது பயணத்தை தொடர்ந்தது என அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணை நடத்தும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவசர தரையிறக்கம்:

சுமார் 293 பயணிகள் மற்றும் 13 விமான குழுவினருடன் போயிங் 787-9 ரக விமானத்தில் இயக்கப்பட்ட AI2030 விமானம், காலை 9:35 மணியளவில் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் பாதுகாப்பு சோதனைகளுக்காக அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

"பயணிகள் முனைய கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது; அதை தொடர்ந்து பயணிகள் மீண்டும் அதே விமானத்தில் ஏறத் தொடங்கினர். பின்னர் விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது" என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

மால்வியா நகர் காவல் உதவி ஆணையர் ஷிவ் தயால் பிடிஐ-யிடம் கூறும் போது, அச்சுறுத்தல் எச்சரிக்கையை தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்து விமான நிலைய அதிகாரிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறினார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் விமானத்தை சோதனையிட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோட் 7500:

"விமானம் காலை 9:35 மணியளவில் தரையிறங்கியது. சோதனையிடுவதற்காக பத்து நிமிடங்களுக்குள் விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது" என்று அந்த வட்டாரங்கள் கூறின.

விமானத்தின் தலைமை விமானி, சட்டவிரோத தலையீட்டை குறிக்கும் 'கோட் 7500' (Code 7500) குறியீட்டை சம்பந்தப்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியதை தொடர்ந்தே ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே 'கோட் 7500' செயல்படுத்தப்பட்டதாகவும், உண்மையில் விமானக் கடத்தல் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது" என்று அந்த வட்டாரங்கள் கூறின.

X

Maalai Malar
www.maalaimalar.com