

ஏர்பஸ் ஏ320 நியோ ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தின் உள்ளே இருந்த கழிவறை கண்ணாடியில் லிப்ஸ்டிக் மூலமாக கடத்தல் குறித்தான மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருப்பதை விமானப் பணிப்பெண்கள் கண்டறிந்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை நோக்கி புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் AI 772 எண்கொண்ட விமானத்திற்கு திடீர் கடத்தல் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்பஸ் ஏ320 நியோ ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தின் உள்ளே இருந்த கழிவறை கண்ணாடியில் லிப்ஸ்டிக் மூலமாக கடத்தல் குறித்தான மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருப்பதை விமானப் பணிப்பெண்கள் கண்டறிந்துள்ளனர். உடனே இந்தத் தகவலை விமானத்தின் பைலட் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் உடனடியாக விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 93 பயணிகளும் 5 விமானப் பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கி விடப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு விமான நிலைய பாதுகாப்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் விரைந்து வந்து விமானத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கழிவறை கண்ணாடியில் இத்தகைய மிரட்டல் செய்தியை எழுதியது யார் என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருக்கக்கூடும் என்பது குறித்தும் காவல்துறையினரும் பாதுகாப்பு ஏஜென்சிகளும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விமானத்தின் உள்ளேயும் விமான நிலைய வளாகத்திலும் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இது போன்ற மிரட்டல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்களை ஏர் இந்தியா நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.