

தீபாவளிப் பரிசு பெற்ற லாரி ஓட்டுநர் ஒருவர் அந்தப் பரிசை பிரித்துப்பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 8-ந்தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளியை சிறப்பாக கொண்டாட பணிபுரியும் இடத்தில் ஊழியர்களுக்கு போனஸ், கிப்ட் பொருட்கள், ஆடைகள் வழங்குவது வழக்கமான ஒன்று.
தீபாவளிப் பரிசு பெற்ற லாரி ஓட்டுநர் ஒருவர் அந்தப் பரிசை பிரித்துப்பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வாபியை சேர்ந்த சுரேஷ் மவுரியா என்ற லாரி ஓட்டுநர், ஒரே நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு அவரது முதலாளி, சுரேஷ் மவுரியாவுக்கு அளித்த தீபாவளி பரிசுகளை அவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் அவர், ஒவ்வொரு பரிசையும் குழந்தையைப் போன்று ஒரு உற்சாகத்துடன் பிரித்து பார்த்து நெகிழ்ச்சியுடன் காண்பித்தார். தனது பணிக்காக இத்தகைய பரிசுகளையும் அங்கீகாரத்தையும் பெறுவது தன் வாழ்நாளில் இதுவே முதல்முறை என்று தெரிவித்தார்.
சுரேஷ் மவுரியாவுக்கு தீபாவளி பரிசாக ரூ.1,000 பணம், புதிய சட்டை, பேண்ட், டிபன் பாக்ஸ், தெர்மோஸ் பிளாஸ்க், காஜு கத்லி இனிப்பு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 24 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.