ரூ.22,000 கோடி நஷ்டம்: ஆனாலும் ஏர் இந்தியா சீரமைப்பு தொடரும்- இயக்குநர் குழு உறுதி

சர்வதேச முன்னணி விமான நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய நவீன, எரிபொருள் சிக்கனமான விமானக் குழுவை உருவாக்குவதே இலக்கு என அவர் கூறினார்.
 Air India
Published on: 
Summary

பாகிஸ்தான் வான்வெளி மூடல், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட வெளிப்புறச் சவால்களுக்கு மத்தியிலும், நிறுவனத்தின் சீரமைப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற ஏர் இந்தியா இயக்குநர் குழு உறுதியாக இருப்பதாக சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தைச் சந்தித்திருந்தாலும், நிறுவனத்தின் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இயக்குநர் குழு உறுதியாக உள்ளதாக சுயாதீன இயக்குநர் சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளார்

ஏர் இந்தியாவின் நிறுவனரான ஜே.ஆர்.டி. டாடாவின் 122-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான தெவோல்ட் கெப்ரெமரியம், செலவினக் கட்டுப்பாடு மற்றும் வணிகச் செயல்பாடுகளில் கூர்மையான பார்வையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

நஷ்டத்திற்கு காரணமான பாதிப்புகள்

மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டின் நிதிநிலை முடிவுகள் ரூ.22,000 கோடிக்கும் மேலான நஷ்டத்தைக் காட்டுவதால், அது குறித்து விவாதங்களும் ஆய்வுகளும் எழுவது இயல்பானது என்றும், வெளிப்படையான ஆய்வுகளை இயக்குநர் குழு வரவேற்கிறது என்றும் சஞ்சீவ் மேத்தா கூறினார். அதேநேரம், அந்த ஆண்டைப் பாதித்த மூன்று முக்கிய வெளிப்புற நிகழ்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். ஏஐ 171 விமான விபத்து, இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் ஈரான்-அமெரிக்கா மோதலால் விமான எரிபொருள் விலையில் ஏற்பட்ட உயர்வு ஆகியவையே அந்தச் சவால்களாகும்.

பாகிஸ்தான் வான்வெளி மூடல்

இந்திய விமான நிறுவனங்களுக்குப் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது, முக்கிய வழித்தடங்களில் பயண நேரத்தை அதிகரித்து, எரிபொருள் பயன்பாட்டையும் செயல்பாட்டுச் சிக்கல்களையும் ஏற்படுத்தியதாக மேத்தா தெரிவித்தார்; இது மேற்கத்திய போட்டி நிறுவனங்களைப் அதே அளவில் பாதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஈரான் போரைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத உயர்வு, பெரிய அளவிலான மறுசீரமைப்பு மற்றும் இயக்கச் செலவுகளை ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருந்த வேளையில் எரிபொருள் செலவையும் கூடுதலாக உயர்த்தியதாக அவர் கூறினார்.

சீரமைப்புத் திட்டம்

இவை சாதாரண வர்த்தக ஏற்ற இறக்கங்கள் அல்ல என்றும், பல ஆண்டுகளாக நடந்து வரும் மாபெரும் சீரமைப்புப் பணிகளுடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்திய வெளிப்புறச் சவால்கள் என்றும் மேத்தா குறிப்பிட்டார். இருப்பினும், பின்னடைவுகளைக் காரணம் காட்டி வேகத்தைக் குறைக்காமல், சீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இயக்குநர் குழு உறுதியுடன் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

மனநிலை, தனித்துவமான திறன்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட அமைப்பு ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் ஏர் இந்தியாவின் மாற்றம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சுமார் 600 புதிய விமானங்களுக்கான ஆர்டர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விமானங்களை நவீனமயமாக்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம், சர்வதேச முன்னணி விமான நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய நவீன, எரிபொருள் சிக்கனமான விமானக் குழுவை உருவாக்குவதே இலக்கு என அவர் கூறினார்.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வழிநடத்திய தெவோல்ட், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் தலைமைத்துவ அனுபவத்துடன் ஏர் இந்தியாவுக்கு வலு சேர்க்கிறார் என்றும், பாதுகாப்பு, செயல்பாட்டு ஒழுக்கம் மற்றும் செலவினக் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் நீண்டகால நிலைத்தன்மையை எட்ட அவர் உதவுவார் என்றும் சஞ்சீவ் மேத்தா நம்பிக்கை தெரிவித்தார்.

X