ரூ.9,825 கோடி நிதி திரட்டும் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம்: உலகளாவிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம்!

20 கோடி பயணிகள் இலக்கு: அதானி ஏர்போர்ட்ஸ் மூன்று முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது.
Adani Airports
Published on
Summary

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 9,825 கோடி) நிதியை முதன்மைப் பங்குகள் மூலம் திரட்டுவதற்கான இறுதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த முதலீட்டாளரின் மூலம், அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடு செய்யும் முன்னணி நிறுவனங்கள்

டெமாசெக், பிளாக்ராக், ஆல்ஃபா வேவ் குளோபல் மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்கள் அடங்கிய ஒரு முதலீட்டுக் கூட்டமைப்பு, அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் மூன்று கட்டங்களாக புதிய பங்குகளைப் பெறவுள்ளது.

இந்த முதலீட்டின் இறுதி கட்டம் ஜூலை 2027க்குள் நிறைவடைய உள்ள நிலையில், இதன் மூலம் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த கூட்டமைப்பிற்கு மொத்தம் 5.54 சதவீத பங்குகள் கிடைக்கும்.

இந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்படும்?

இதில் திரட்டப்படும் ரூ.9,825 கோடி நிதி மூன்று முக்கிய திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.

முதலாவதாக, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் விமான நிலைய உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தல்.

இரண்டாவதாக, விமான நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் முதற்கட்டமாக 22 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டு இடங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட அதானி ஏர்போர்ட் சிட்டி ரியல் எஸ்டேட் வளாகங்களை உருவாக்குதல்.

மூன்றாவதாக, தரைவழி கையாளுதல் மற்றும் விமானப் போக்குவரத்து அல்லாத இதர வணிக செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

நிறுவனத்தின் முக்கியப் புள்ளிகள் கூறுவது என்ன?

"இந்தக் கூட்டுத்தொழில் அதானி ஏர்போர்ட்ஸ் தளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்.

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை, நாட்டின் GDP வளர்ச்சிக்கு மிக முக்கியமான உந்துசக்தியாக உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் உலகின் முன்னணி ஒருங்கிணைந்த விமான நிலைய தளமாக நாங்கள் உருவெடுப்போம்."

"இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வரும் வேளையிலும், நாட்டின் முக்கிய நகரங்களில் எங்களது நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சூழலிலும், அதானி ஏர்போர்ட்ஸை உலகின் மிகப்பெரிய விமான நிலைய தளமாக மாற்றுவதே எங்களது இலக்கு" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் பன்சால் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com