

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நிறைவடைந்துள்ள மாநிலங்களில், தவறாக நீக்கப்பட்ட தகுதியுள்ள வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2 கட்டங்களாக நடந்து முடிந்த எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படி, 2025ல் எஸ்ஐஆர் செயல்முறை தொடங்குவதற்கு முன்பு நாட்டில் இருந்த மொத்த 94.7 கோடி வாக்காளர்களில், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 13.8 கோடி (14.6 சதவீதம்) வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் பெயர்களுடன், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் குறிவைக்கப்பட்டு நீக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக முறைகேடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது 3ஆம் கட்ட எஸ்ஐஆர் நடந்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு மேலும் வலுவடைந்துள்ளது. இதனிடையே எஸ்ஐஆர் நடவடிக்கையில் ஞானேஷ் குமாருடன் மற்ற 2 ஆணையர்களுக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து சிஜேபி, காங்கிரஸ் மற்றும் பிற சமூக செயல்பாட்டு அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ஜந்தர் மந்தர், மும்பை சிவாஜி பூங்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ஏற்கனவே தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியை பறிகொடுத்த நிலையில் இந்த விவகாரத்தில் பாஜக கவனமுடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நிறைவடைந்துள்ள மாநிலங்களில், 'படிவம் 6' மூலம் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்ட தகுதியுள்ள வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பி.எல்.ஓ.க்கள்), எஸ்ஐஆருக்கு முந்தைய மற்றும் பிந்தைய வாக்காளர் பட்டியல்களை ஒப்பிட்டு, முந்தைய பட்டியலில் இருந்து தற்போது விடுபட்டவர்களைக் கண்டறிவார்கள்.
பின்னர் இந்த அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அவர்களின் தற்போதைய நிலையைச் சரிபார்த்து, தகுதியுடையவர்களாக இருந்தால், படிவம் 6 மூலம் அவர்களை மீண்டும் பதிவு செய்ய உதவுவார்கள் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு மாதத்தில் முழு செயல்முறையையும் முடிக்க, ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 வாக்காளர்களைத் தொடர்பு கொள்வர்.
புதிதாகப் பதிவுசெய்த வாக்காளர்களின் பட்டியல், அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் பகிரப்படும்.
இறுதியாக, வாய்ப்பைத் தவறவிட்ட தகுதியுள்ள வாக்காளர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குவதற்காக வாக்குச்சாவடி நிலை முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று ஆணையம் விளக்கியுள்ளது.
முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் ஆன்லைன் படிவம் 6-ல் சேர்க்கப்பட்டிருந்த கூடுதல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆர்) உறுதிமொழிப் பிரிவை தேர்தல்ஆணையம் நீக்கியது.
எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றம் உடனே அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், அ்ங்கு் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 1960-ம் ஆண்டின் வாக்காளர்கள் பதிவு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட 'படிவம் 6'-ஐ மட்டும் இனி சமர்ப்பித்தால் போதுமானது.