

இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், மாநாட்டை முடித்துக் கொண்டு அபுதாபிக்கி கிளம்புவதற்கு முன்பு தனது கார் ஓட்டுநருக்கு நன்றி தெரிவிக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்
“மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை உருவாக்குதல்” என்ற கருப்பொருளின் கீழ் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 13 உலகத் தலைவர்களும் 17 தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த பிரிக்ஸ் மாநாட்டில் ஐக்கிய அரப அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்துகொள்ளவில்லை.
இதன்காரணமாக அந்நாட்டின் பிரதிநிதியாக பட்டத்து இளவரசரான ஷேக் காலித் மாநாட்டில் கலந்துகொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தி விநியோகம், வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, நிதி ஒத்துழைப்பு, கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் விவாதிக்கப்பட்டன.
மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் நிலவும் பிராந்தியப் பாதுகாப்பு கவலைகள், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் பிரிக்ஸ் கட்டமைப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கேற்பு ஆகியவை குறித்தும் இந்த விவாதங்களில் விவாதிக்கப்பட்டது.
உச்சிமாநாட்டை ஒட்டி நடைபெற்ற தனது நிகழ்ச்சிகளின்போது, பிரதமர் மோடி பல உலகத் தலைவர்களை முறைப்படியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்காகச் சந்தித்தார்.
இந்த நிலையில் மாநாடு முடிந்து தனது நாட்டிற்கு திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு ஷேக் காலித் தனது காரிலிருந்து இறங்கி வந்தார். அப்போது அவர் புறப்படுவதற்கு தயாராக தனது விமானத்தில் ஏற முயன்றார்.
விமானம் புறப்படவிருந்த நேரத்தில், அதன் படிகளில் ஏறிய அவர், திடீரென விமானத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது அவர் திரும்பி, காரை நோக்கி நடந்து சென்று இந்திய ஓட்டுநருடன் கைகுலுக்கி, புறப்படுவதற்கு முன்பு அவரிடம் சில வார்த்தைகளை பேசினார்.
இதையடுத்து அவரது இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர், தனது ஓட்டுநரை நேரில் அங்கீகரிக்க நேரம் ஒதுக்கியதற்காக அவரை பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.