சோதனை மேல் சோதனை.. மம்தா அறிவித்த மற்றொரு வேட்பாளரும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு - அடுத்த நடந்த டுவிஸ்ட்

மம்தா தரப்பினர் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மிரட்டப்படுகிறார்கள்
மம்தா
மம்தா
Published on
Summary

மேற்கு வங்க ரெஜிநகர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவித்து பின் 3 மணி நேரத்தில் யு டர்ன் அடித்துள்ளார்.

ஆட்சியை இழந்தததில் இருந்து மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சோதனை மேல் சோதனையாக நடந்து வருகிறது.

294 இடங்களில் 207 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்து சுவேந்து அதிகாரி முதலமைச்சர் ஆனார். அதேநேரம் 80 இடங்களில் மட்டுமே 15 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருந்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அதிலும் 58-60 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்தனர். அவர்களுக்கே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. கிளர்ச்சி அணியின் ரிதர்பா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

கிளர்ச்சி அணி தாங்களே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என கூறி வருகிறது. அதேநேரம் திரிணாமுல் காங்கிரசின் 28 நாடாளுமன்ற எம்பிகளில் 20 பேர் விலகிச் சென்று பெயருக்கு என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜகவின் என்டிஏவுக்கு ஆதரவு நல்கினர்.

இதனிடையே தேர்தல் ஆணையத்தில் மம்தா தரப்பும் கிளர்ச்சி எம்எல்ஏக்கள் தரப்பும் கட்சிக்கு உரிமை கொண்டாட இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. தற்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 வாக்குப்பதிவு நடைபெற்று 9 ஆம் தேதி எண்ணப்படும்.

இந்த சூழலில் இடைத்தேர்தலில் இரு தரப்பும் போட்டியிட முடிவெடுத்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சினத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரு தரப்புக்கும் தற்காலிக பெயர், சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் இடி

இதனிடையே இன்று ரெஜிநகரில் மம்தா தரப்பால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரைபுல் ஆலம் சவுத்ரி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என பின்வாங்கினார். ஆனால் 3 மணி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் மம்தா தரப்பு அறிவித்த மிலான் பிரதான் சுவேந்து அதிகாரியை சந்தித்த பின் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தது மம்தாவுக்கு பேரிடியாக அமைந்திருந்த நிலையில் ரெஜிநகர் தொகுதியிலும் தான் நிறுத்திய வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவித்தது அவருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யு டர்ன்

எனவே அவர் வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து மம்தா பானர்ஜி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் பின்னரே சவுத்ரியின் மனமாற்றம் நடந்துள்ளது.

"சின்னம் புதுசு. மக்கள் சின்னத்தை அடையாளம் கண்டு எனக்கு ஓட்டு போட சிரமப்பாடுவாங்க. அதனால தான் நான் வாபஸ் வாங்க முடிவு பண்ணேன். ஆனா மம்தா பானர்ஜிகிட்ட பேசுனப்போ, அவங்க, 'உங்களால முடிஞ்ச சிறந்ததை கொடுங்க'ங்கு சொன்னாங்க" என தன் மனமாற்றம் குறித்து விவரித்தார் சவுத்ரி.

மேலும் தன்னை யாரும் மிரட்டியோ, அழுத்தம் கொடுத்தே வாபஸ் பெற வற்புறுத்தவில்லை என தெரிவித்த சவுத்ரி, மம்தா தரப்பினர் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மற்றவர்களால் மிரட்டப்படுகிறார்கள் எனவும் ஆதங்கம் தெரிவித்தார்

மனம் மாறி மீண்டும் போட்டியிட முடிவெடுத்த சவுத்ரி வரும் சனிக்கிழமை முதல் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் தொடங்க உள்ளார்.

இருப்பினும் நந்திகிராம் தொகுதியில் மம்தா நிறுத்திய வேட்பாளர் வாபஸ் பெற்றது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது

இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் பெயர் - சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com