

தன் பெண் தோழியை தன் பெற்றோர் முதன்முதலில் சந்தித்துக்கொண்ட உணவகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்தை ராகுல் காந்தி நினைவுகூர்ந்தார்.
சோனியா காந்தியின் 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தக வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட சோனியா காந்தியின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தந்தை ராஜீவ் காந்தி, தாய் சோனியா காந்தி குறித்த பல இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பெற்றோரின் காதல் கதை, ராஜீவ் படுகொலைக்கு பிறகு தாய் சோனியா வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் பேசினார்.
தனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்த லண்டன் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழக உணவகம் தொடர்பான ஒரு வேடிக்கையான சம்பவத்தை ராகுல் நினைவு கூர்ந்தார்.
"பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் கேம்பிரிட்ஜில் இருந்தபோது, என் பெண் தோழியை (Girlfriend-ஐ) அந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன். நான் ஏன் அங்கு செல்கிறேன் என்று அவளிடம் சொல்லவில்லை.
நான் உள்ளே சென்று, என் பெற்றோர் இங்குதான் சந்தித்தார்கள் என்று பணியாளரிடம் சொன்னேன். அதற்கு அவர், 'ஓ மனிதரே... எனக்கு நன்றாகத் தெரியும்' என்று பதிலளித்தார்.
சிக்கன் சசார் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னார், அதனால் நாங்கள் அதை ஆர்டர் செய்தோம்.
ஆனால் உணவு மிகவும் மோசமாக இருந்தது. நீங்கள் காதலில் விழ விரும்பினால், பல்கலைக்கழக உணவகத்திற்கு செல்லுங்கள், ஆனால் அந்த சிக்கனை ஒருபோதும் சாப்பிடாதீர்கள்" என்று ராகுல் புன்னகையுடன் கூற, அவையில் சிரிப்பொலி எழுந்தது.
தன் பெற்றோருக்கு இடையேயான ஆழமான பாசத்தை விவரித்த ராகுல், "ஒவ்வொரு வேளை உணவின்போதும் என் அம்மா என் அப்பாவின் மடியில் அமர்வார். இதுபோன்ற ஒரு காட்சியை நான் மற்ற வீடுகளில் பார்த்ததில்லை.
என் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் அவர்கள் சண்டையிடுவதை நான் பார்த்திருக்கிறேன். என் அப்பா, பஞ்சாபின் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்குடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது" என்றார்.
"பாட்டி இந்திரா காந்தி, பின்னர் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகளால், எங்கள் குடும்பம் இரண்டு பெரிய தூண்களை இழந்தது. கலகலப்பாகவும் புன்னகையுடனும் இருந்த அம்மா மறைந்துவிட்டார்.
அவரது வாழ்க்கையின் ஒளி அணைந்துவிட்டது. அனைவருடனும் இணக்கமாகப் பழகிவந்த அவர், தனிமையாகிவிட்டார்" என்று ராகுல் தெரிவித்தார்.
அந்த நேரத்தில், நாட்டின் மக்கள், குறிப்பாக கிராமங்களில் உள்ளவர்கள், அவருக்குத் துணையாக நின்று, 'நீங்கள் எங்களில் ஒருவர்' என்று உறுதியளித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
"என் வாழ்வில் அவர் பயந்ததை நான் பார்த்ததே இல்லை. எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை" என சோனியா காந்தி புற்றுநோயை எதிர்த்துப் போராடிய விதத்தையும் அவரது தைரியத்தையும் ராகுல் பாராட்டினார்.
தன் பேச்சை முடிக்கும்போது ராகுல் உணர்ச்சிப் பெருக்குடன், "அம்மா... என் அப்பா உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இப்போது அவர் உங்களைப் பற்றி எவ்வளவு பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று கூறினார்.