

காந்தி குடும்பத்தை பற்றி எழுதப்பட்ட பல விஷயங்கள் உண்மையில்லாதவை என்றும், தனது குடும்ப உறுப்பினர்களை பற்றி பரப்பப்பட்ட பொய்களை முறியடிக்க வேண்டியது அவசியம் என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவி சோனியா காந்தி தெரிவித்தார். தனது சுயசரிதையை எழுதியதற்கான காரணங்களை விளக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற புத்தகம், டெல்லியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் அவரது பிள்ளைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், 'இந்தியா' (INDIA) கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவரும் பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சருமான அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சோனியா காந்தி, தனது புத்தகத்திற்கு கிடைத்துள்ள அன்பையும் வரவேற்பையும் கண்டு நெகிழ்ந்து போவதாக கூறினார். வெளியீட்டாளரான 'ஹார்பர்காலின்ஸ்' (HarperCollins) நிறுவனத்தின் தகவல்படி, இந்த புத்தகம் வெளியான முதல் வாரத்திலேயே இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனையாகி, சிறந்த விற்பனையை பெற்றுள்ளது.
தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்ட சோனியா காந்தி, தனது மாமியார் இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகும், அதை தொடர்ந்து தனது கணவர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பிறகும் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அப்போது தனது பிள்ளைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தான் தன்னை கவனித்துக்கொண்டனர் என்றும் தெரிவித்தார்.
அந்த கடினமான காலத்தை நினைவுகூர்ந்த அவர், "எனது மகனும் மகளுமே எனக்கு பெரும் துணையாக இருந்தனர். நான் ஒரு குழந்தையை போல மாறினேன், அவர்கள் எனக்கு பெற்றோராக மாறினார்கள்; ஏனெனில், நான் முற்றிலும் நிலைகுலைந்து, என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருந்தேன்" என்று கூறினார்.
ராஜீவ் காந்தியுடனான தனது பிணைப்பை நினைவு கூர்ந்த அவர், அவருடனான தனது காதல் "மந்திரம் போன்றது" என்று குறிப்பிட்டார். "எங்களை பற்றி பல விஷயங்கள் பேசப்படுகின்றன; அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் உண்மையற்றவை, எங்களின் நிஜமான இயல்புக்கும் அவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்களை பற்றி பல கதைகளும் பொய்களும் புனையப்படுகின்றன; உண்மையை துளியும் சாராத, மனதை புண்படுத்தும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
எனது உணர்வுகளை வெளிப்படுத்தவும், எனது குடும்பத்தை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளவும் இது ஒரு வழியாக இருக்கும் என்று நினைத்தேன். ஒருவேளை, மக்கள் எனது கதையை கேட்கவும் முன்வரலாம்," என்று சோனியா காந்தி தனது சுயசரிதையை எழுத முடிவெடுத்தது குறித்து கூறினார்.
இந்த புத்தகம் இத்தாலியில் இருந்து வந்த ஒரு பெண்ணின் அனுபவத்தை பற்றியது மட்டுமல்ல, திருமணத்திற்கு பிறகு புகுந்த குடும்பத்தோடு இணைந்து வாழ வேண்டிய பல இந்திய பெண்களின் அனுபவங்களை பற்றியது என்றும், அதனால்தான் புத்தகத்திற்கு 'சேர்ந்திருத்தல்' (belonging) என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறினார்.