

தாத்தாவிடமிருந்து தந்தை பெற்ற சொத்தில் பேரன் பங்கு கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தந்தையின் சொத்துக்களைப் பிரிக்கக் கோரி, மகன் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசி மற்றும் சுனிதா அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
“அட்டவணையின் முதல் வகுப்பின் கீழ் மகனின் மகன் வாரிசாகக் குறிப்பிடப்படவில்லை, எனவே, அவரால் தனது தாத்தாவின் சொத்தில் எந்த உரிமையையும் பெற முடியாது,” என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் ஒருவர் தனது தந்தையிடமிருந்து சொத்தைப் பெற்றவுடன், அவர் அந்தச் சொத்தின் முழுமையான உரிமையாளராகிவிடுகிறார் என்றும், அவர் விரும்பியபடி அதை நிர்வகிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்து வாரிசுரிமைச் சட்டப்படி வாரிசுகள்' பிரிவில் தந்தை, தாய், மனைவி, மகன் மற்றும் மகள்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தந்தை உயிருடன் இருக்கும்போது 'மகனின் மகன்' (பேரன்) நேரடியாக இப்பிரிவின் கீழ் வரமாட்டார்.
பாகப்பிரிவினை செய்யப்படாமல் தொடர்ந்து கூட்டுக்குடும்பச் சொத்தாகவோ அல்லது பூர்வீகக் கூட்டுச் சொத்தாகவோ நீடித்தால் மட்டுமே அதில் பேரின் பிறப்புரிமை கோர முடியும்.
ஆனால், ஒருமுறை சட்டப்படி பாகப்பிரிவினை செய்து தந்தைக்கென்று தனிப் பங்கு ஒதுக்கப்பட்டுவிட்டால், அதன் கூட்டுத்தன்மை முடிவுக்கு வந்துவிடும்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் பின்னணியில் சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் 29 ஆண்டுகால சொத்துத் தகராறு மற்றும் நீண்ட சட்டப் போராட்டம் அடங்கியுள்ளது.
என். ராமகிருஷ்ணன் என்பவருக்கு சென்னையில் சொந்தமாக 1,811 சதுர இடம் இருந்துள்ளது.
ராமகிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு, அவரது மகள்களில் ஒருவர் 1993-ல் இந்த சொத்தை பிரிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
1994-ல், நீதிமன்றத்தில் குடும்பத்தினரிடையே ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில், ராமகிருஷ்ணனின் 1,811 சதுர அடி நிலம், அவரது மகனான குமரனுக்குக் கிடைத்தது.
சொத்தைப் பெற்ற குமரன், அந்த நிலத்தை வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். குமரன் சொத்தை விற்றதை எதிர்த்து அவரது மகன் ராஜேஷ் தனது தாய் கோமதியை பாதுகாவலராகக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
“இந்தச் சொத்து தாத்தாவிடம் இருந்து வந்த பூர்வீகக் கூட்டுக்குடும்பச் சொத்து. எனவே, இதில் எனக்கும் பிறப்புரிமை அடிப்படையில் சரிபாதி உரிமை உள்ளது. என் அனுமதி இல்லாமல் தந்தை இதை விற்க முடியாது” என தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "தாத்தாவின் சொத்து பாகப்பிரிவினை மூலம் தந்தைக்கு வந்தவுடன், அது தந்தையின் தனிப்பட்ட சொத்தாகிவிடுகிறது. அதில் மகனுக்கு (பேரனுக்கு) பிறப்புரிமை இல்லை" எனக் கூறி மகனின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.