

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நேற்று இரவு விருந்தில் சைவ உணவு வகைகள் மட்டும் பரிமாறப்பட்டது பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காநிதி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைந்தது. ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், சீன அதிபர் ஜி ஜின் பிங், மலேசிய பிரதமர் இப்ராஹிம் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் மாநாட்டின் முதல் நாளான நேற்று இரவு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டின் உணவுப் பட்டியல் குறித்து நேரடியாக எதையும் குறிப்பிடாத ராகுல் காந்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரி தயாரித்த 'சோலே பட்டுரே' உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்: இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை; அதேபோல் என் சகோதரி சமைத்த இந்த சோலே பட்டுரேவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தலைவர்கள் பங்கேற்ற ஒரு விருந்தில் இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட உணவுக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்காமல், முற்றிலும் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே ராகுல் காந்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது.
பிரதமர் மோடி அளித்த விருந்தில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சிறுதானியங்களை மையமாக கொண்ட பல்வேறு சைவ உணவுகள் உலகத் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்டன.
காந்த்வி மில்பெயில்), காளான் கபாப், பனீர் லபாப்தார், குச்சி மார்மிக், காரட் பீன்ஸ் பொரியல், ராகி-சிறுதானிய புலாவு உள்ளிட்டவற்றுடன் பல்வேறு வகையான இந்தியப் பாரம்பரிய இனிப்பு வகைகள்ளும் பரிமாறப்பட்டன.
இந்த சிறப்பு சைவ விருந்தில் சீன அதிபர் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் ஆகியோர் பங்கேற்காமல் தவிர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுலின் விமர்சனத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவு ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்கப்படுவதாகவும் பரிமாறப்பட்ட உணவு சுவை, ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரியம் நிறைந்தது என்று விவரித்தார்.
விருந்தினர்கள் பரிமாறப்பட்ட இந்திய சைவ உணவு வகைகளை விரும்பி உண்டனர் என்றும் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.