ரூ.1.5 லட்சம் கடனுக்காக 6 மாத குழந்தை, தாய் கடத்தல் - ஆந்திராவில் பரபரப்பு!

காவல்துறையின் தலையீட்டின் காரணமாக, தாயும், சேயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரூ.1.5 லட்சம் கடனுக்காக 6 மாத குழந்தை, தாய் கடத்தல் - ஆந்திராவில் பரபரப்பு!
Published on: 

ஆந்திரப் பிரதேசம் திருப்பதி மாவட்டத்தில் ரூ.1.5 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், தாயும் 6 மாதக் குழந்தையும் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மாவட்டம் தொட்டம்பேடு மண்டலம் சிவநாதபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆதி - மேகமாலா தம்பதியினர், சுமார் 7 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகாளஹஸ்தியைச் சேர்ந்த வெங்கடகிரி முனெம்மா, பிரசாத், மோகன் ஆகியோரிடம் 5 ரூபாய் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.

கடன் வாங்கியவர்கள் அசல் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்த தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நவ.11ம் தேதி, ஆதி வெளியே சென்றிருந்தபோது, ​​பிரசாத்தும் அவரது மகன் மோகனும், தம்பதியரின் வீட்டிற்குச் சென்று, மேகமாலாவையும், அவரது ஆறு மாதக் குழந்தையையும் தங்களுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மேகமாலாவின் தாயார் இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து இருவரையும் மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாளஹஸ்தி துணைக் காவல் கண்காணிப்பாளர் பவானி, மேகமாலாவின் எழுத்துப்பூர்வ புகாரில் வட்டி கேட்டு அழுத்தம் கொடுத்ததாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், வழக்குப் பதிவு செய்ய உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கந்துவட்டி கொடுமையைத் தடுக்கத் தவறியதாக ஆளும் அரசு மீது எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

X