பாஜக ஆட்சிக்கு வந்த பின் 5வது என்கவுண்டர்.. மேற்கு வங்கத்தில் காவல்துறையினரால் ரவுடி சுட்டுக் கொலை

கொல்லப்பட்ட ஐவரில் மூன்று பேர், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள் ஆவர்.
மேற்கு வங்கத்தில் காவல்துறையினரால் ரவுடி கொலை
Published on: 
Summary

மேற்கு வங்கத்தில் ரத்தன் ஷேக் என்ற ரவுடி காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டான்.

மேற்கு வங்கம் பீர்பூம் மாவட்டத்தின் சாந்திநிகேதன் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட லாயக்பஜாரில் சரித்திர பதிவேடு குற்றவாளியான ரத்தன் ஷேக்கை நேற்று முன் தினம் மாலை கைது செய்ய காவல்துறையினர் சென்றனர்.

ரத்தன் மீது திருட்டு, கொள்ளை, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் இருந்தன.

காவலர் காயம்

காவல்துறை தகவல்படி, ரத்தன், தன்னை கைது செய்ய வந்த காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பிஸ்வஜித் தாஸ் என்ற காவலரின் இடது காலில் குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார். ரத்தன் ஷேக் அங்கிருந்து தப்பினான்.

முதலமைச்சர் சுவேந்து நேற்று மருத்துவமனையில் காயமடைந்த காவலரை சந்தித்தார்.

இதனிடையே தப்பிச் சென்ற ரத்தனை கைது செய்ய காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. சுமார் 24 மணி நேரத்திற்குள், காவல்துறை ரத்தனைக் கைது செய்தது.

துப்பாக்கிச்சூடு

காவல்துறையின் கூற்றுப்படி, ஆயுதங்களை மீட்பதற்காக ரத்தன் ஓர் இடத்திற்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டான்.

அங்கு, ரத்தன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்து காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். காவல்துறையினர் பதிலுக்கு சுட்டதில் ரத்தன் கொல்லப்பட்டான்.

ஐந்தாவது என்கவுண்டர்

முன்னதாக கடந்த மே மாதம் பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் காவல்துறையின் என்கவுண்டரில் நான்கு குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். தற்போதைய என்கவுண்டரையும் சேர்த்து ஐந்து என்கவுண்டர் கணக்காகிறது.

கொல்லப்பட்ட ஐவரில் மூன்று பேர், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள் ஆவர்.

ஐந்து சம்பவங்களிலும் தற்காப்புக்காவே சுட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

இதற்கிடையில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

X