இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 5 கோடி குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை - ஐ.நா.

இந்தியாவில் பள்ளிகளில் 1 கோடியே 20 லட்சம் குழந்தைகளுக்கு குடிநீர் வசதி இல்லை.
இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 5 கோடி குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை - ஐ.நா.
Published on: 
Summary

2030-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை குடிநீர் வசதி வழங்கும் இலக்கை நோக்கி முன்னேறும் 62 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 5 கோடி குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமும் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வசதி

2025-ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் 24 கோடியே 40 லட்சம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. இதில் இந்தியாவில் மட்டும் 5 கோடி குழந்தைகள் உள்ளனர். உலக அளவில் பள்ளிகளில் சுகாதார வசதி இல்லாத குழந்தைகளில் 5-ல் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார். 2015 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் பள்ளிகளில் சுகாதார வசதி இல்லாத நிலை 4 சதவீதம் குறைந்துள்ளது.

குடிநீர் வசதி

இந்தியாவில் பள்ளிகளில் 1 கோடியே 20 லட்சம் குழந்தைகளுக்கு குடிநீர் வசதி இல்லை. மேலும், சுமார் 2 கோடி குழந்தைகளுக்கு தனிநபர் சுகாதார வசதி இல்லை. இருப்பினும், போதுமான தகவல்கள் இல்லாததால் தனிநபர் சுகாதார வசதி குறித்த முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் குடிநீர் வசதியைப் பொறுத்தவரை இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை குடிநீர் வசதி வழங்கும் இலக்கை நோக்கி முன்னேறும் 62 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட காலத்தில் இந்தியாவில் பள்ளிகளுக்கான அடிப்படை குடிநீர் வசதி ஆண்டுக்கு 4 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

எத்தியோப்பியா

பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதி இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக நைஜீரியாவில் 3 கோடியே 40 லட்சம் பேரும், எத்தியோப்பியாவில் 2 கோடியே 60 லட்சம் பேரும் உள்ளனர். காங்கோ ஜனநாயக குடியரசில் 1 கோடியே 10 லட்சம் பேரும், இந்தோனேசியாவில் 50 லட்சம் பேரும் உள்ளனர்.

2030-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் குடிநீர், சுகாதாரம் மற்றும் தனிநபர் சுகாதார வசதிகளை வழங்க வேண்டும் என்று உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ளன.

ஆனால், தற்போதைய முன்னேற்றம் போதுமானதாக இல்லை. 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை குடிநீர் வசதி கிடைக்க வேண்டுமென்றால், தற்போதைய முன்னேற்றத்தைவிட 4 மடங்கு வேகமாக பணிகள் நடைபெற வேண்டும். அடிப்படை சுகாதார வசதிகளில் முன்னேற்றத்தை 5 மடங்காகவும், தனிநபர் சுகாதார வசதிகளில் முன்னேற்றத்தை 4 மடங்காகவும் அதிகரிக்க வேண்டும்.

தற்போதைய வேகம் தொடர்ந்தால், 2030-ம் ஆண்டில் உலக அளவில் 84 சதவீத பள்ளிகளுக்கு மட்டுமே அடிப்படை குடிநீர் வசதியும், 81 சதவீத பள்ளிகளுக்கு சுகாதார வசதியும், 79 சதவீத பள்ளிகளுக்கு தனிநபர் சுகாதார வசதியும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2030-ம் ஆண்டிலும் 10 சதவீத பள்ளிகளில் குடிநீர் வசதியும், 7 சதவீத பள்ளிகளில் சுகாதார வசதியும், 12 சதவீத பள்ளிகளில் தனிநபர் சுகாதார வசதியும் இருக்காது.

X

Maalai Malar
www.maalaimalar.com