

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த நால்வரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி சீனிவாசன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கில் தங்களது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என 4 பேரும் மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக, அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் 4 பேர் மீதான நடவடிக்கை முடிந்ததும் அறிவிப்பேன் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.