"4.6 கிலோ எடை... ஆச்சரியப்படுத்திய சுகப்பிரசவம்!" ஆந்திராவில் பிறந்த 'பாலபீமன்'!

எங்கள் வரலாற்றில் சுகப்பிரசவத்தில் இவ்வளவு எடையுடன் குழந்தை பிறந்தது இதுவே முதல்முறை
New born baby
Published on

ஆந்திர மாநிலத்தில் 4.6 கிலோவுக்கும் அதிக எடையுடன் ஆண் குழந்தை ஒன்று சுகப்பிரசவத்தில் பிறந்துள்ள அபூர்வ நிகழ்வு மருத்துவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக 3.5 கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமே பிரசவிக்க முடியும் என்ற மருத்துவ விதியை உடைத்து, இந்த சுகப்பிரசவம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் துனி நகர அரசு மருத்துவமனைக்கு, சீதாராம்புரம் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டபோது, குழந்தையின் எடை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இருப்பினும், அறுவை சிகிச்சைக்கு அவசரப்படாமல், சிறப்பு மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு இயல்பான பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது.

துணிச்சலான பிரசவம்... 'பாலபீமன்' வருகை!

மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பின், அனிதாவிற்கு 4.615 கிலோ கிராம் எடையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.

சாதாரண பிரசவ எடை வரம்பை விட இரண்டு மடங்கு எடையுடன் பிறந்த இந்தக் குழந்தையை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆச்சரியத்துடன் 'பாலபீமன்' என்று அன்போடு பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

மருத்துவமனை வரலாற்றில் புதிய சாதனை

இதுகுறித்து துனி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், "எங்கள் மருத்துவமனையின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிக எடையுடன், அதுவும் சுகப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ள நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குழந்தை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com