

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள நர்மதை ஆற்றில் இருந்து 343 வாக்காளர் அட்டைகள் எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது.
ஆற்றங்கரையோரம் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணியின்போது கண்டெடுக்கப்பட்ட இந்த 343 வாக்காளர் அடையாள அட்டைகள், இந்தூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான இந்தூர் மாவட்டத்தின் ராவ் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது.
தற்போது இத்தொகுதியின் பிரதிநிதியாக பாஜக எம்.எல்.ஏ. மது வர்மா உள்ளார்.
ஆற்றங்கரையில் இருந்து வாக்காளர் அட்டைகள் எடுக்கப்படுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரவி நாயக் மண்டலேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாவிட்டால், காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் எனவும் எச்சரித்துள்ளார்.
வருவாய்த் துறையினர் அட்டைகளைப் பறிமுதல் செய்ததாகவும், இதுகுறித்து விசாரிக்க காவல் நிலையப் பொறுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டதாகவும் மண்டலேஷ்வர் துணைப் பிரிவு காவல் அதிகாரி ஸ்வேதா சுக்லா தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகவேண்டும் என நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது .