

இந்தியா வசம் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த Federation of American Scientists என்ற ஆராய்ச்சி மையம் வெளியிட்டஅறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ஏவுகணைகளுக்கான 160 அணுகுண்டுகள் உள்ளன.
புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ஏவுகணைகளுக்காக மேலும் 30 அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டு நாட்டின் மொத்த அணுகுண்டு இருப்பு தற்போது 190 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக 140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியத்தை சேமித்து வைத்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சமீபத்திய அறிக்கையின்படி பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், இந்தியாவின் அணுஆயுத இருப்பு அதைவிட அதிகமாக வளர்ந்துள்ளது.
2 போர் விமானங்கள், 6 தரைவழி பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1 நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என இந்தியா தற்போது 9 வெவ்வேறு வகையான அணுஆயுத ஏவுதல் அமைப்பை பயன்பாட்டில் வைத்துள்ளது.
மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன, அவை விரைவில் முப்படைகளில் இணையவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா தனது அணுஆயுத தரவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்லை. எனவே அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் அரசு ஆவணங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் தரவுகள் மூலமே மதிப்பிடப்பட்டவை ஆகும்.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் 'துருவா' அணு உலைக்குப் பிறகு, தமிழ்நாடு கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் கட்டப்பட்ட 500 மெகாவாட் PFBR அணு உலை இந்த ஆண்டு ஏப்ரலில் தனது முதன்மைக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த உலை 80% திறனுடன் இயங்கினால், ஆண்டிற்கு சுமார் 140 கிலோ புளுட்டோனியம்-239 ஐ உற்பத்தி செய்ய முடியும். இது ஆண்டிற்கு 35 புதிய அணுஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமானது.
கல்பாக்கத்தில் FBR-1 மற்றும் FBR-2 ஆகிய மேலும் இரண்டு வேகப்பெருக்கு அணு உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.