அடுக்குமாடி குடியிருப்பு செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது மூச்சுத்திணறி 3 இளம் தொழிலாளர்கள் உயிரிழப்பு

சுமன் (24), சுரேஷ் (25) மற்றும் பவன் (25) ஆகிய 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on: 
Summary

ஐதராபாத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது வெளிப்பட்ட நச்சு வாயு தாக்கி ​​மூன்று துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தனர்

ஐதராபாத்தின் புறநகரில் பச்சுபள்ளியில் உள்ள தினேஷ் அவுரிக் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று மதியம், தனியார் துப்புரவு நிறுவன ஊழியர்கள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுருந்தனர்.

உயிரிழப்பு

சுத்தம் செய்யும் பணி நடந்துகொண்டிருந்தபோது செப்டிக் டேங்கில் இருந்து விஷ வாயு வெளிப்பட்டுள்ளது.

இதில் சுமன் (24), சுரேஷ் (25) மற்றும் பவன் (25) ஆகிய 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

சடலங்கள்

தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழியிலிருந்து சடலங்களை மீட்டனர்.

செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் சடலங்களுக்கான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழியில் தேங்கியிருந்த நச்சு வாயுவை சுவாசித்ததால் தொழிலாளர்கள் இறந்தார்களா என்பதை உறுதிப்படுத்த விசாரணை நடந்து வருகிறது.

பாதுகாப்பு இல்லை?

அதேநேரம் குழிக்குள் இறங்குவதற்கு முன்பு தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு பிற பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டனவா என்பதையும் காவல்துறை விசாரித்து வருகிறது.

ஒரே ஆண்டில் 31 பேர் உயிரிழப்பு

தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையத்தின் (NCSK) தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கழிவுநீர் குழாய் (Drainage) மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது மொத்தம் 31 பேர் உயிரிழந்தனர். இருப்பினும், 9 வழக்குகளில் மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டது.

X