

நடப்பாண்டில் நாடு முழுவதும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் தொட்டிகளை சுத்தம் செய்தபோது மொத்தம் 31 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் 9 பேருக்கு மட்டுமே முழு இழப்பீடும் சென்று சேர்ந்துள்ளது.
தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையத்தின் (NCSK) தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கழிவுநீர் குழாய் (Drainage) மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது மொத்தம் 31 பேர் உயிரிழந்தனர். இருப்பினும், 9 வழக்குகளில் மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு, அரியானாவில் அதிகபட்சமாக 8 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 6 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 3 பேரும், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 2 பேரும் கழிவுநீர் குழாய் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது உயிரிழந்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 51 மரணங்கள் பதிவாகின, அவற்றில் 28 வழக்குகளுக்கு மட்டுமே முழு இழப்பீடு வழங்கப்பட்டது.
2024ஆம் ஆண்டில், கழிவுநீர் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்வது தொடர்பான 54 மரணங்கள் நிகழ்ந்தன. 43 வழக்குகளில் இழப்பீடு வழங்கப்பட்டது.
கழிவுநீர்க் குழாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்களின் மரணம் தொடர்கதையாகி வரும் நிலையில் அவர்களுக்கு உரிய இழப்பீடு சென்று சேர்வதில் தேக்கம் நீடிக்கிறது.
NCSKன் அறிக்கையின்படி, 2016 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல் தொடர்பான மொத்தம் 773 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இவற்றில், 677 வழக்குகளில் முழு இழப்பீடும் வழங்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் தலா 100 மரணங்கள் பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 98, குஜராத்தில் 86 மற்றும் அரியானாவில் 85 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மாவட்ட மற்றும் காவல் துறை அதிகாரிகள், மாநில அரசுகள் மற்றும் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளதாக NCSK தெரிவித்துள்ளது.